மோசமான கேங்ஸ்டரான பூமியின்(சரத் குமார்) ஆட்களை தொம்சம் செய்யும் ருத்ரனுடன் படம் துவங்குகிறது. ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ருத்ரன்.தனது தாய் பூர்ணிமா பாக்கியராஜ், தந்தை நாசருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ருத்ரன் {ராகவா லாரன்ஸ்}. குறிப்பாக தனது தாயின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். இந்த சமயத்தில் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரை சந்திக்கும் ருத்ரன் காதலில் விழுகிறார். இந்த காதல் திருமணம் வரை செல்லும் நேரத்தில், ருத்ரனின் தந்தைக்கு பிரச்சனை வருகிறது.
தனது நண்பனை நம்பி 6 கோடி கடன் வாங்கினார் நாசர். ஆனால், அவர் நாசரை ஏமாற்றிவிட்டு 6 கோடி பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். கடன் கொடுக்க முடியாமல் நண்பனின் துரோகத்தை தாங்க முடியாமல் மரணடைகிறார். நாசரின் மரணத்திற்கு பின், வாங்கிய 6 கோடி கடனை வட்டியுடன் 7 கோடியாக திருப்பி கொடுக்க வேண்டுமென கடன் கொடுத்தவர் கேட்க, தந்தையின் டிராவல்ஸ் நிறுவனத்தை விற்று 3 கோடி ரூபாய்யை முதலில் கொடுக்கிறார் ருத்ரன். பின் மீதமுள்ள 4 கோடி கடனை அடைக்க அதிக சம்பளம் கிடைக்கும் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறார்.
இதற்கிடையில் பிரியா பவானி ஷங்கரை திருமணம் செய்யும் ருத்ரன் தனது தாய் மற்றும் மனைவியை விட்டு பிரிந்து வெளிநாட்டிற்கு செல்கிறார். 6 வருடங்களுக்கு பின், சென்னைக்கு மீண்டும் வருவதற்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் ருத்ரனின் தாய் மரணமடைகிறார். மனைவி பிரியா பவானி ஷங்கர் காணாமல் போகிறார்.
ருத்ரன் தாய் எப்படி இறந்தார்? பிரியா பவானி ஷங்கருக்கு என்ன நடந்தது? இதன் பின்னணி என்ன என்பதை ருத்ரன் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை..
தங்களுக்கு நெருக்கமானவர்களின் மரணத்திற்காக ஹீரோ பழிவாங்கும் கதையை பல காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ருத்ரனின் கதையும் அது தான். அடுத்தது என்ன என்பதை எளிதில் கணிக்க முடிகிறது.
ஹீரோவாக வரும் ராகவா லாரன்ஸ் ஆக்ஷன், காதல், பாசம், செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் சூப்பராக நடித்துள்ளார். குறிப்பாக செண்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். ராகவா லாரன்ஸ் தாயாக நடித்துள்ள பூர்ணிமா பாக்கியராஜின் நடிப்பு படத்திற்கு பலம். பிரியா பவானி ஷங்கர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். முழுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமாரின் நடிப்பு மிரட்டல்.
முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு வாழ்த்துக்கள். எடுத்துக்கொண்ட கதைக்களம், சொல்ல வந்த கருத்து இரண்டையும் சிறப்பாக செய்துள்ளார்.
ஒரு கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. தாராளமாக பார்க்கலாம்.