அசோக் செல்வன் ஒரு நாள் இரவு குடித்துவிட்டு போதையில் இருக்கிறார். இதனால் போலீஸ் அவரை கைது செய்து அழைத்து செல்கிறது. அப்போது செல்லும் வழியில் தன்னுடைய காதல் தோல்விகளை போலீசாரிடம் அசோக் செல்வன் சொல்கிறார். அதில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது கார்த்திகா மீது உண்டாகும் காதல், கல்லூரி படிக்கும் போது சாந்தினி மீது ஏற்படும் காதல், எம்பிஏ படிக்கும் போது மேககா ஆகாஷ் மீது ஏற்படும் காதல் என வரிசையாக தன்னுடைய காதல் களைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். இறுதியில் அசோக் செல்வன் தன்னுடைய காதலில் வெற்றி பெற்றாரா? எந்த காதல் கை கோர்த்தது? என்பதே படத்தின் மீதி கதை.
அசோக் செல்வன் அர்விந்த் என்கிற சபாவாக கதையின் நாயகனாக தன் பள்ளி, கல்லூரி நாட்களில் நடந்த காதல் தோல்விகளை விவரிப்பதில் படம் முழுவதும் நகைச்சுவை கலந்து, நட்பு, நண்பனின் காதல், பிரிவு, சோகம் என்று ஜாலியான இளைஞனாகவும், பள்ளி மாணவனாகவும் இருவேறு கெட்டப்களில் அசத்தலுடன் செய்து இருக்கிறார். படம் முழுவதும் பேசிக் கொண்டே இருந்தாலும் அலுப்பு ஏற்படாதவாறு திறம்பட செய்துள்ளார்.
கார்த்திகா, சாந்தினி, மேகா ஆகியோரும் தனக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மட்டும் வந்தாலும் மேகா ஆகாஷின் வருகை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சாந்தினி சில காதல் காட்சிகள், ஒரு பாடல் என தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இவர்களுடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருக்கலாம்.
அசோக் செல்வனின் நண்பர்களாக நடித்திருக்கும் அருண், ஜெயசீலன், ஸ்ரீராம், அனீஷ் ஆகியோர் யூடியுப் வீடியோவில் நடிக்கும் அதே பாணியில் நடித்திருப்பதால், அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் யூடியுப் வீடியோவையே நினைவூட்டுகிறது. அசோக் செல்வனின் சகோதரியாக நடித்திருக்கும் பெண், மைக்கல் தங்கதுரை, மயில்சாமி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பும் அளவு.
ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோரின் ஒளிப்பதிவு மூன்று காலக்கட்டங்களையும் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பதோடு, காட்சிகளை கலர்புல்லாகவும் படமாக்கியிருக்கிறது.
ஈரோடு,கோயம்பத்தூர் சுற்றி நடக்கும் கதைக்களத்தில் ஒரு இளைஞனின் பள்ளி, கல்லூரி காலத்து நட்பு, காதல் தோல்விகளை சுவாரஸ்யத்துடன் விவரிக்கும் இடங்களிலும், படம் முழுவதும் ஆங்காங்கே ஒன் லைன் காமெடி பஞ்ச்கள் எட்டிப் பார்க்கும் வண்ணம் திறம்பட திரைக்கதையமைத்துள்ளார் இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன். இதையெல்லாம் எதற்காக காவல்துறையினரிடம் விவரிக்கிறார் என்பதுதான் படத்தின் திருப்பமான முடிவால் க்ளைமேக்சில் கவனிக்க வைக்கிறார் இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன்.
லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட ரகமாக இருந்தாலும், திரும்ப திரும்ப கேட்கும்படியும், இளசுகளை கவரும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.