சலார் ; விமர்சனம்


கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியுடன் இயக்குனர் பிரசாந்த் நீலும் மூன்று தொடர் தோல்வி படங்களை கொடுத்து சரிவில் இருக்கும் பிரபாசும் இணைந்துள்ள படம் இது. பிரசாந்த் நீலின் வெற்றியை தக்க வைத்ததா ? பிரபாஸின் தோல்வி முகத்தை மாற்றியதா இந்த சலார் ? பார்க்கலாம்.

மூன்று பழங்குடி சமூகத்தினர் சேர்ந்து ஆட்சி நடத்தும் பகுதியான கான்சார், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்திய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல், தனியாக சட்டம் வகுத்துக்கொண்டு ராஜமன்னாரின் (ஜெகபதிபாபு) தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. ராஜமன்னாரின் மகனான வரதராஜா ராஜமன்னாரும் (ப்ரித்விராஜ்) தேவாவும் (பிரபாஸ்) உயிர் நண்பர்கள். ராஜம் மன்னாருக்கு பிறகு அவரது அரியணையில் அமர்வது யார்? என்ற போட்டியில், அவருடைய இரண்டாம் மனைவியின் மகனான பிரித்விராஜ் சுகுமாரனுக்கு உரிமை மறுக்கப்படுவதோடு, அனைவரும் ஒன்று சேர்ந்து அவரையும், அவருடைய ஆட்களையும் அழிக்க முடிவு செய்கிறார்கள்.

இதற்காக ஒவ்வொருவரும் தங்களது படைகளை தயார் செய்ய, பிரித்விராஜ் சுகுமாரன் மட்டும் எந்தவித படையையும் தயார் செய்யாமல் சிறுவயதில் பிரிந்துபோன, தனது நண்பன் பிரபாஸை உதவிக்கு அழைக்கிறார். நண்பனுக்காக எதையும் செய்யும் பிரபாஸ், தனிமனித ராணுவமாக நின்று தனது நண்பனுக்காக கான்சாரின் அதிகாரத்தை கைப்பற்றும் போரில் தீவிரம் காட்டும் போது, அவரைப் பற்றிய ஒரு உண்மை தெரிய வருகிறது. அது என்ன? அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது, என்பது தான் இரண்டாம் பாகம்.

நாயகனாக நடித்திருக்கும் பிரபாஸுக்கு கொடுக்கப்படும் பில்டப்புக்கு அவர் நூறு சதவீதம் பொருந்துகிறார். ஆறடி உயரத்தில், வாட்டசாட்டமாக இருக்கும் அவருடைய ஒரு அடியே இடி போல் விழுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. உணர்வுபூர்வமான காட்சிகளிலும் அதே ஆக்‌ஷன் முகத்தை வைத்திருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம். அமைதியாகவே இருக்கும் பிரபாஸ் வசனம் பேசுவதும், நடிப்பதும் மிக மிக குறைவு தான்.

வில்லனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் கொஞ்சம் அடக்கி வாசித்து காரியத்தை சாதிக்கும் கேரக்டர் அதை திறம்பட செய்துள்ளார். அதேபோல படத்தில் அவருக்குத்தான் நடிக்க அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் மனைவியின் மகன் என்பதால் சிறுவயதில் இருந்தே நிராகரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் காட்சிகளின் போது தனது உணர்ச்சிகரமான நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார் பிரித்விராஜ்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன், முகத்தில் பெரிய மாற்றம் தெரிவதோடு அவர் மீது ஒளிப்பதிவாளரும், மேக்கப் மேனும் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்பதும் தெரிகிறது. கான்சார் மற்றும் பிரபாஸ் பற்றிய கதையை கேட்பது தான் அவருடைய வேலை என்பதால் அவருக்கு நடிக்க வாய்ப்பே கொடுக்கப்படவில்லை.

ராஜ மன்னார் வேடத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, பிரபாஸின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், ராஜம் மன்னாரின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

பவுன் கவுடாவின் ஒளிப்பதிவு ஆக்‌ஷன் காட்சிகளையும், பில்டப் காட்சிகளையும் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் படமாக்கியிருக்கிறது. ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அதிலும், பிரபாஸுக்கு கொடுப்படும் பில்டப்புக்கே பில்டப் கொடுக்கும் விதத்தில் அவருடைய பீஜியம் அமைந்திருக்கிறது.

கதை எதுவாக இருந்தாலும், அதை கொடுக்கும் விதம் தான் முக்கியம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் நீல்ஆக்‌ஷன் படம்தானே எனத் தொழில்நுட்பம், பிரமாண்ட ஸ்டன்ட் போன்றவற்றை மட்டும் நம்பாமல் உணர்வுபூர்வமாகவும், அடர்த்தியான அடுக்குகள் கொண்ட கதையாலும் கவனிக்க வைக்கிறார்.