பெண்கள் மீதான் வன்கொடுமை, சிறுமியர் கடத்தல், குழந்தைகள் கடத்தல் போன்றவற்றை மையமாக வைத்து வரும் படங்களின் வரிசையில் இணைந்துள்ளது சினம்.
நடிகர் அருண் விஜய்யின் யானை படத்தை தொடர்ந்து இன்றைய தினம் சினம் படம் வெளியாகியுள்ளது. குமரவேலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ளார்.
சென்னையின் புறநகர் பகுதியான ரெட்ஹில்ஸ் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார் அருண் விஜய். கடமை தவறாமல் நடக்க நினைக்கும் அருண் விஜய்யின் இந்த நல்ல குணத்தை அவ்வப்போது கிண்டலடிக்கிறார் அதே காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர். ஷேர் ஆட்டோவில் பயணமாகும் பல்லக் லால்வானி, 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். கொலையும் செய்யப்படுகிறார். அவரது உடலுக்கு அருகே ஒரு ஆணின் உடலும் இருப்பதால், அந்த வழக்கை கள்ளக் காதல் என கூறி அவரை அருண் விஜய்யின் உயரதிகாரி களங்கப்படுத்துகிறார்.
தொடர்ந்து தன்னுடைய மனைவியின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கிறார் அருண் விஜய். மனைவியின் கொலை வழக்கை விசாரிக்கும் அருண்விஜய் கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
அருண் விஜய் மிகவும் கம்பீரமாக போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல தனது கெட்டப்பை சிறப்பாக்கி நடித்துள்ளார். கிளீன் ஷேவுடன் அவரை பார்க்கும் போது அழகாக காணப்படுகிறார். அருண்விஜய்யின் மனைவியாக வரும் பாலக் லால்வானின் குறைவான காட்சிகளில் வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
ஏட்டையாக வரும் காளி வெங்கட் தனி கவனம் பெறுகிறார். யார் வில்லன் என்பது சஸ்பென்ஸ்.
கோபிநாத்தின் ஒளிப்பதிவும், ஷபீரின் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
அதிரடியான போலீஸ் படமாக இல்லாமல், செண்டிமெண்ட் படமாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் குமரவேலன்.
மொத்தத்தில் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அதிகமான வன்முறை இல்லாததே படத்திற்கான பலம். இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.