வெந்து தணிந்தது காடு ; திரை விமர்சனம்

கிராமத்தில் இருந்து கிளம்பும் முத்துவீரன் எப்படி முத்து பாய் ஆகிறார் என்பது தான் வெந்து தணிந்தது காடு படத்தின் ஒன்லைன்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளது.

முள்ளுக்காட்டினைக் பிளைப்பாகக் கொண்டு வாழும் அளவுக்கு வறுமையும், பஞ்சமும் முத்துவின் குடும்பத்தை வதைக்கிறது. வேறு வழியில்லாமல் மும்பைக்கு விரைகிறான் முத்து. காலையில் பரோட்டா கடையில் வேலை, இரவில் ரத்தம் தெறிக்க ரவுடியிசம் என இரு வேறு பணிகளை செய்கிறார். இதற்கிடையில் பாவை மீது காதல்.
எதிர்பார்த்தது போலவே ஒரு நாள் முத்து ஹீரோவாக, பெரிய ஆட்கள் இருக்கும் வளையத்திற்குள் முன்னேறுகிறார். கர்ஜி கேங், குட்டி பாய் கேங் என பிரிந்து கிடக்கும் இரண்டு கேங்குகளுக்கு நடுவில் முத்துவின் நிலை என்ன ஆனது, அவனை சார்ந்த நபர்களின் கதி என்ன என்பதாக விரிகிறது வெந்து தணிந்தது காடு பாகம் 1.

முத்து வீரனாகச் சிம்பு. சிம்புவா இது என வியந்து போகும் அளவுக்கு உருமாறியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாகக் கதை சகஜ நிலைக்குவர, அவரின் உடல்வாகும் அதற்கேற்ப மாறுகிறது. பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கும் சிம்புவுக்கு இதுவொரு சிறப்பான செகண்டு இன்னிங்ஸ். ஹீரோயின் சித்தி இட்னானிக்கான காட்சிகள் குறைவுதான் என்றாலும் நன்றாகவே நடித்திருந்தார்.

அப்புக்குட்டியின் பாத்திரமும் அவரின் நடிப்பும் கதையை நகர்த்த உதவியிருக்கிறது. முத்துவின் அம்மாவாக வரும் ராதிகா, நண்பனாக வரும் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

பாடல்களை தாண்டி பின்னணி இசையில் பிண்ணி எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். குறிப்பாக இடைவெளி காட்சியில் வரும் பின்னணி இசை மாஸ்.

இது கௌதம் மேனன் படமா என்று கேட்கும் அளவிற்கு ஒரு வித்தியாசமான கதை காலத்துடன் இறங்கியிருக்கிறார் கௌதம்.

ஆரம்பக்கட்ட காட்சிகள் கொஞ்சம் மெதுவாய் நகர்ந்தாலும், ‘Rise of Muthu’ என்பதாக இருக்கும் முதல் பாதி சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

சண்டைக்காட்சிகளில் சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு வேறு ரகம். சித்தார்த்தாவின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும், ஜெயமோகனும் படத்திற்கு பலம்.