ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் மனிதர்களின் உதவிக்காக ஒரு ரோபோவை உருவாக்குவார் விஞ்ஞானி ரஜினி. அதேபோல ரோபோவுக்கு பதிலாக ஒரு செல்போன் ஆப்பை பெண்ணாக உருவாக்கினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை தான் இந்த படம்.
விஞ்ஞானி சாரா காதலி கிடைக்காமல் தவிக்கும் சிங்கிள் பசங்களுக்காக ஒரு செல்போன் ஆப்பை உருவாக்குகிறார். அந்த ஆப்பை தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால் அது இளம்பெண் போல நட்பாக பழகும். தேவையான உதவிகளை செய்து கொடுக்கும். துரதிஷ்டவசமாக இதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்குள் இந்த ஆப் திருட்டுப்போய் ஒருவழியாக மிர்ச்சி சிவா கையில் வந்து கிடைக்கிறது.
அதுவரை டெலிவரி பாயாக இருந்த சிவா இந்த ஸ்மார்ட் சிம்ரன் கொடுக்கும் ஐடியாக்களால் கோடீஸ்வரர் ஆகிறார். இந்த ஸ்மார்ட்போன் மேகா ஆகாஷ் உருவத்தில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் சிவா மீது மேகா ஆகாஷுக்கு காதல் வருகிறது. ஆனால் அவருக்கு ஏற்கனவே அஞ்சு குரியன் என்கிற காதலி இருக்கிறார். இதனால் மேகா ஆகாஷின் காதலை சிவா மறுக்கிறார்.
கோபமாகும் மேகா ஆகாஷ் எப்படி ஐடியாக்களை கொடுத்து சிவாவை பணக்காரர் ஆக்கினாரோ அதேபோல தப்பு தப்பான ஐடியாக்களை கொடுத்து அவரை மீண்டும் நடுத்தெருவுக்கு கொண்டு வருகிறார். அதுமட்டுமல்ல அவரது காதலிலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இந்த பிரச்சினைகள் எல்லாம் சரிசெய்து சிவா மீண்டாரா என்பது கிளைமாக்ஸ்.
கதையை கேட்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் இது எவ்வளவு ஜாலியான படமாக இருக்கும் என்பது. அதே சமயம் படம் முழுவதும் அந்த கலகலப்பு இருக்கிறதா என்றால் சில இடங்களில் கொஞ்சம் சொதப்பி இருக்கிறார்கள். பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார்கள்.
சிவாவின் நடிப்பை பற்றி நாம் புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. வழக்கம் போல படபட பட்டாசாக பொரிந்து தள்ளுகிறார். காதலியாக அஞ்சு குரியனுக்கு பெரிய வேலை இல்லை. அதேசமயம் செல்போன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மேகா ஆகாஷ் அதிக நேரம் தனியாக பேசுவது போல இருந்தாலும் கூடுமானவரை தனது கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்.
மாகாபா ஆனந்த், சாரா இவர்கள் தங்கள் பங்கிற்கு கலகலப்பை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். நீண்ட நாளைக்கு பிறகு பாடகர் மனோவும் இந்தப்படத்தில் நடிகராக முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளார். அந்த வகையில் ஜாலியாக சிரித்து பொழுது போக்கிவிட்டு வரலாம் என நினைக்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் ஒரு சரியான சாய்ஸ் என்று சொல்லலாம்.