தக்ஸ் ; விமர்சனம்

இதுவரை பெரும்பாலும் தமிழ் சினிமாக்களில் சிறையில் இருந்து கதாநாயகன் இன்று இரவு தான் தப்பிக்க போகிறேன் என்று கூறுவார். அடுத்த காட்சியில் பார்த்தால் அவர் சாலையில் ஓடிக் கொண்டிருப்பார். போலீஸ் துரத்தும்.. இல்லையென்றால் அவர் பழிவாங்க துடிக்கும் வில்லனில் வீட்டில் அவரது பெட்ரூமிலேயே நுழைந்து இருப்பார். சிறையில் இருந்து எப்படி தப்பித்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியையே மொத்த படமாக எடுத்தால் எப்படி இருக்கும் அதுதான் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள தக்ஸ் திரைப்படம். இது மலையாளத்தில் வெளியான சுவாதந்தரியம் அர்த்தராத்திரியில் என்கிற படத்தின் ரீமேக்காக உருவாகி உள்ளது.

படத்தின் நாயகன் ஹிர்து ஹாரூண் தன் காதலியுடன் திருமணம் முடிந்து வெளிநாட்டிற்கு செல்ல இருக்கும் சூழலில் போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கே பாபி சிம்ஹா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் வெவ்வேறு வழக்குகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைக்கும் ஹிர்து ஹாரூண், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த் உள்ளிட்டவர்களுடன் கூட்டணி சேர்ந்து சிறையில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டி செயல்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு வழியாக சுரங்கப்பாதை தோண்டி தப்பிக்கும் முயற்சியில் திடீரென ஜெயிலரின் பார்வையில் பட்டு விடுகிறார்கள். அவர்களது தப்பிக்கும் முயற்சி ஜெயித்ததா ? அனைவரும் தப்பினார்களா ? என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ்.

படம் பாதிக்கு மேல் ஜெயிலில் நடப்பது போன்று படமாக்கப்பட்டு இருந்தாலும் அதை போரடிக்காமல் நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குனர் பிருந்தா. அறிமுக நாயகன் ஹிர்து ஹாரூண் இந்த படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இன்னும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு எதிர்காலம் இருக்கிறது.

நடிகர் பாபி சிம்ஹா இந்த படத்தில் வில்லன் அல்லாத ஒரு குணசித்திர கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். படத்தின் நாயகி அனஸ்வரா ராஜன் கடந்த வருடம் வெளியான திரிஷா நடித்த ராங்கி திரைப்படத்தில் அவரது அண்ணன் மகளாக நடித்திருந்த டீன் ஏஜ் பெண். இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக மாறி இருக்கிறார். இந்த படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் கண்களாலும் உடல் மொழியாலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி சபாஷ் பெறுகிறார்.

முனீஸ்காந்த் தன் பங்கிற்கு கலகலப்பை ஏற்படுத்த முயற்சித்து இருக்கிறார். நடிகர் ஆர்.கே சுரேஷ் கட்டுப்பாடான ஜெயில் அதிகாரியாக தனது கடமையை சரியாக செய்திருக்கிறார்.

படத்தின் பெரும்பகுதி கதை சிறையில் நடப்பதாக இருந்தாலும் அதை செட் என்று தெரியாமல் எதார்த்தமாக வடிவமைத்துள்ள கலை இயக்குனரை பாராட்டலாம்.

நாயகன் உள்ளிட்டோர் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சிகள் திக்திக் ரகம். அந்த வகையில் ஒரு திரில்லிங்கான படத்தை ரசிக்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த தக்ஸ் ஒரு திருப்தியான படம்.