குழந்தைகளை மையப்படுத்தி, அவர்களுக்குள் இருக்கும் உலகம் பற்றி பெரிய அளவில் படங்கள் வருவதில்லை என்கிற குறை எப்போதும் இருக்கிறது. அப்படியே சில படங்கள் வந்தாலும் பள்ளிப்பருவத்திலேயே காதல், மோதல் போன்ற அவலமான கதை சொல்லலால் அந்த படங்களும் நம் மனதில் நிற்பதில்லை. ஆனால் முழுக்க முழுக்க குழந்தைகளின் கோணத்தில் அவர்களுடைய மனநிலையை சொல்லும் விதமாக படு எதார்த்தமாக வெளியாகி இருக்கும் படம் தான் இந்த சிறுவன் சாமுவேல்.
கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில் இந்த கதை நிகழ்கிறது. சிறுவன் சாமுவேல் மற்றும் அவனுடன் படிக்கும் ராஜேஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் சாமுவேலுக்கு கிரிக்கெட் என்றால் உயிர் சொந்தமாக ஒரு கிரிக்கெட் மட்டை வாங்கி தரச்சொல்லி பெற்றோரிடம் அடம் பிடிக்கிறான். ஒரு கட்டத்தில் தனது உறவினர் வீட்டுக்கு செல்லும்போது அங்கே இருக்கும் இன்னொரு பையன் கிரிக்கெட் கார்டுகளை சேர்த்து வைத்துள்ளதை பார்க்கிறான்.
அதை கொண்டுபோய் கடையில் கொடுத்தால் தனக்கு கிரிக்கெட் மட்டை இலவசமாக கிடைக்கும் என்பதால் அந்தப் பையனுக்கு தெரியாமல் அதை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு செல்கிறான். அங்கே எதிர்வாராத விதமாக அந்த கிரிக்கெட் கார்டுகளை சாமுவேலின் தந்தை பார்த்து விடுகிறார்
அதன் பிறகு என்ன நடந்தது ? சாமுவேலுக்கு புதிய கிரிக்கெட் பேட் கிடைத்ததா ? சாமுவேலின் யாருக்கும் தெரியாத ஒரு வித்தியாச குணத்தால் அவனது நண்பன் ராஜேஷுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது ? அதை சாமுவேல் எப்படி சரி செய்ய முயற்சிக்கிறான் என்பதை இன்னொரு கிளைக்கதை. இந்த இரண்டிற்கும் கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.
சிறுவன் சாமுவேலாக நடித்துள்ள அஜிதன் தவசிமுத்து நடிப்பு என சொல்ல முடியாதபடி தன்னுடைய தினசரி வாழ்க்கையை வாழ்வது போலவே நடித்துள்ளான். அவனது முகத்தில் சந்தோசம், இயலாமை, வருத்தம் என அனைத்தையும் நேரத்திற்கு தகுந்தாற்போல் வெளிப்படுத்துவது மிகப்பெரிய ஆச்சர்யம் தருகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மிகப்பெரிய நடிகர்களை தோற்கடிக்கும் விதமாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளான்.
சாமுவேலின் நண்பனாக வரும் ராஜேஷும் நடிப்பில் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். அவனது பள்ளி படிப்பு தடைபட்டபின் தனது தந்தையுடன் வேலைக்கு செல்லும் காட்சிகளை பார்க்கும்போது நிச்சயமாக நம் கண்களில் கண்ணீர் வரும்.
தவறு செய்யாத ஒருவனுக்கு தொடர்ந்து எப்படி இந்த சமூகத்தால் திருட்டு பட்டம் கட்டப்படுகிறது என்பதையும் அதனால் அவன் வாழ்க்கையை எப்படி திசைமாறிப் போகிறது என்பதையும் ராஜேஷ் கதாபாத்திரம் அழுத்தமாக பதிவு செய்கிறது.
படத்தில் நடித்துள்ள மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் சோடை போகாத நடிப்பை வழங்கியுள்ளனர். அனைவருமே அந்த மண்ணின் மைந்தர்களாக எதார்த்தமாக நடித்துள்ளதால் அந்த நபர்களுக்குள் நாமும் ஒருவராக இருப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது.
மேலும் அந்த மண்ணிற்கே உரிய வட்டார வழக்குத் தமிழை இயக்குனர் சாது பயன்படுத்தியுள்ளார். கேட்பதற்கும் பார்ப்பதற்கும் கொஞ்சம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது.
இந்த படத்தில் இன்னொரு பிளஸ் பாயிண்ட் ஒளிப்பதிவாளர் சிவநாத் காந்தி. கன்னியாகுமரி மற்றும் கேரள எல்லை பகுதியில் உள்ள கிராமங்களில் இயற்கை அழகை அப்படியே அள்ளிக்கொண்டு வந்து நம் கண்களில் கொட்டுகிறார்.
குழந்தை பருவத்தில் அவர்களது உணர்வுகளுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்து அவர்களை கவனித்தால் அவர்களது எதிர்காலம் தடம் மாறி போகாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கிற கருத்தை இந்த படத்தின் மூலம் வலியுறுத்தி உள்ளார் இயக்குனர் சாது.
சிறுவன் சாமுவேல் பெரியவர்களுக்கே மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளான்.