ஃபர்ஹானா ; விமர்சனம்

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஃபர்ஹானா.

சென்னை ஐஸ்ஹவுஸின் நடுத்தர முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஃபர்ஹானா (ஐஸ்வர்யா ராஜேஷ்). தனது கணவர் கரீம் (ஜித்தன் ரமேஷ்) நடத்தி வரும் செருப்பு கடையின் வியாபாரம் கைகொடுக்காததால் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். அதன்படி கால் சென்டர் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த பின் ஃபர்ஹானாவின் குடும்ப பொருளாதார சூழல் முன்னேற்றம் காண்கிறது.

இதனிடையே தனது குழந்தைக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் ஃபர்ஹானாவுக்கு மேலும் பணம் தேவைப்படுவதால், அவர் வேலை செய்யும் கால் சென்டரில் 3 மடங்கு அதிகம் இன்சென்டிவ் கொடுக்கும் மற்றொரு பிரிவில் பணியாற்ற ஒப்புக்கொள்கிறார். அந்த வேலை ஃபர்ஹானாவின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப்போடுகிறது என்பது தான் படத்தின் மீதிக்கதை.

ஃபர்ஹானாவாகவே வாழ்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். திரையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரியவில்லை இஸ்லாமிய பெண் ஃபர்ஹானா மட்டும் தான் தெரிகிறார். ஃபர்ஹானாவுக்கு ஏற்படும் குழப்பங்கள், பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஸ்ட்ரிக்டான குடும்பத்தில் இருந்து வந்த ஃபர்ஹானா எப்படி முகம் தெரியாத ஒருவரை சந்திக்க ஒப்புக்கொள்கிறார் என்பது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

ஃபர்ஹானாவின் பிரச்சனைகள், குழப்பங்களை சஸ்பென்ஸுடன் அழகாக கொடுத்திருக்கிறார் நெல்சன். ஃபர்ஹானாவின் உலகத்தை தன் கேமரா மூலம் சிறப்பாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஃபர்ஹானாவின் கணவராக வரும் ஜித்தன் ரமேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

மொத்தத்தில் ஃபர்ஹானா அனைவரும் பார்க்க வேண்டிய படம்.