வாஸ்கோடகாமா – விமர்சனம்


நல்லது செய்தால் தண்டனை.. தப்பு செய்தால் பாராட்டு என ஒரு நிலை உருவானால்..? பல்வேறு அறிவியல் முன்னேற்றங்களை கண்டு வரும் இவ்வுலகில் எதிர்காலத்தில் நல்ல செயல்களில் ஈடுபடும் மக்களை குற்றவாளிகளாகவும், தீய செயல்களில் ஈடுபடுபவர்களை உத்தமர்களாகவும் பார்க்கப்படலாம், இந்த கற்பனையை மையமாக வைத்து காமெடியாக உருவாகியுள்ள ‘வாஸ்கோடகாமா’ ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறதா ? நீண்ட நாளைக்கு பிறகு மீண்டு(ம்) வந்திருக்கும் நகுலுக்கு கை கொடுத்திருக்கிறதா..? பார்க்கலாம்.

பல யுகங்கள் கடந்தபின் நிகழும் கதைக்களம். இதில் தாதாவான ஆனந்த்ராஜ் மகள் அர்த்தனா ஒரு நல்ல மனிதனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு காணும் பெண். ஆனால் தந்தை ஆனந்த் ராஜ் ஒரு அயோக்கியனை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, அர்த்தனா உண்மையான நல்ல மனிதரான நகுலை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

இதனிடையே எதிர்பாராத சூழ்நிலையில் நகுல் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. மேலும் சிறைச் சுவர்களுக்குள் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான குழப்பமான சம்பவங்கள் நடக்க, நகுல் நல்லவராக இருந்து தீயவர்களிடமிருந்து அனைவரையும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

இது முழுக்க முழுக்க நகைச்சுவைப்படம் என்பதால் நகுலுக்கு அல்வா சாப்பிடுவது போல. படம் முழுவதும் திருதிருவென முழித்து முழித்து நடித்திருக்கிறார் நகுல்.திரைக்கதையும் அப்படியே இருப்பதால் அவர் நடிப்பும் மிகப் பொருத்தமாக இருக்கிறது. கதாநாயகி அர்த்தனா பினு – வழக்கம்போல தமிழ் திரைப்பட கதாநாயகியாக திரையில் தோன்றுகிறார் அவ்வளவுதான்.

வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், பிரேம்குமார், படவா கோபி, சேசு என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் என்.வி.அருணின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு. ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.

ஒரு காலத்தில் இப்படிப்பட்ட கற்பனைகள் மிகைபோல் தோன்றினாலும், அதற்குப் பிறகான காலங்களில் இவை நிஜமாகவே நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம். இதன் ஒருவரிக்கதையை வித்தியாசமாக யோசித்துவிட்டு, அதற்கான திரைக்கதையை சரியான திசையில் நகர்த்த தெரியாமல் குழம்பி இருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜி.கே. உண்மையிலேயே இது வித்தியாசமான களம்தான். ஆனால், அதை லாஜிக்குடன் யோசித்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து காட்சிகள் உருவாக்கி இருந்தால் இந்தப் படம் குறிப்பிடத்தக்க ஒன்றாக மாறியிருக்கும்.