அஜித், த்ரிஷா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். 12 வருட திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்படுகிறது. த்ரிஷாவுக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட… விவாகரத்து கோருகிறார். இதற்கு ஒப்புக்கொள்கிறார் அஜித். இந்த நிலையில், இருவரும் காரில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்கிறார்கள். வழியில் அவர்களது கார் பழுதடைந்து விடுகிறது.
அந்த வழியாக வரும் லாரியின் உரிமையாளர் அர்ஜூன் மற்றும் அவரது மனைவி ரெஜினா கசாண்ட்ரா, உதவி செய்வதாக கூறி திரிஷாவை மட்டும் உடன் அழைத்துச் செல்கிறார்கள். சிறிது நேரம் கழித்து அஜித் பயணித்த கார் சரியான பிறகு, அஜித் திட்டமிட்டபடி அருகில் உள்ள நெடுஞ்சாலை உணவகத்திற்கு வருகிறார். அதன் பிறகு தான் த்ரிஷா கடத்தப்பட்டார் என்ற விவரம் தெரிய வருகிறது. அவர் ஏன் கடத்தப்பட்டார் ? அஜித் அவரை மீட்டாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
மூன்று விதமான அழகிய லுக்குகளில் வருகிறார் அஜித். வழக்கமான மாஸ் பில்டப்புகளோ, பஞ்ச் வசனங்களோ இல்லாமல், முற்றிலும் மாறுபட்டு, ஓர் எளிய மனிதராக, சாதாரண குடும்பத் தலைவராக அருமையாக, அசத்தலாக நடித்திருக்கிறார். இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை ஏற்றதற்கே அவரை பாராட்ட வேண்டும். மனைவியின் இன்னொரு காதலை ஏற்கும் அவரது பக்குவம், தன்னை புரிய வைக்க செய்யும் முயற்சி என சிறப்பாக நடித்து இருக்கிறார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை மிக நாகரீகமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார் என்றாலும் நடிப்பை பொறுத்தவரை த்ரிஷாவை விட ரெஜினா கசண்ட்ராவுக்கு வாய்ப்பு அதிகம். அதை அவர் மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டு ஸ்கோர் செய்திருக்கிறார்
அர்ஜூன் கதாபாத்திரம் எதிர்பார்த்தபடி வில்லனாக வந்தாலும், படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. ரவுடித்தனம் செய்யும் மைக்கேலாக வரும் ஆரவ், நாயகி கயலின் தோழி அனுவாக வரும் ரம்யா சுப்பிரமணியன், டாக்டர் மனோகர் சந்திரசேகராக வரும் ரவி ராகவேந்திரா, மற்றும் நிகிலாக வரும் நிகில் சஜித், பைஜுவாக வரும் சஞ்சய் கணேஷ் சரவணன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்
அனிருத்தின் ‘பத்திகிச்சு’ டிராக் அதிரடி காட்சிகளில் ஒரு அருமையான பின்னணியாக களமிறங்கி காட்சிகளை மேம்படுத்துகிறது. இசைகளின் சங்கமத்தில் சிறப்பாக பணி புரிந்துள்ளார். ஓம் பிரகாஷ் தனது ஒளிப்பதிவால் ஸ்டண்ட் காட்சிகளுடன் ஒரு அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார். குறிப்பாக பாலைவன கார் பயணம், ஒரு காருக்குள் நடக்கும் சண்டைக் காட்சிகள் என மிரட்டியுள்ளார்.
‘பிரேக் டவுன்’ எனும் ஹொலிவுட் படத்தினை தழுவி தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதனை நம்ம ஊர் அஜித்தின் ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றம் செய்யாமல் அஜித்தின் விருப்பப்படி படத்தை அப்படியே மெருகு குலையாமல் கொடுத்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. காதல், மோதல், பிரிதலில் எடுக்கும் தவறான முடிவு எத்தகைய ஆபத்தில் முடிந்து இறுதியில் யபுரிதலில் சேர்கிறது என்பதை மிகச் தெளிவாக அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.