சிம்புவின் படங்கள் படப்பிடிப்பு முடிந்து தயாரானவுடன் ரிலீஸாக தாமதமாவது படத்தின் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே செட்டில் செய்யாமல் விட்ட கடன் பிரச்சனைகளினால் தான். இது ஊர் உலகம் அறிந்த உண்மை.. அதேபோல அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பும் இழு இழு என இழுத்துகொண்டு போவது சாட்சாத் சிம்புவினால் தான் என்பது அவரே மறுக்க முடியாத உண்மை..
அல்லு சில்லு அறிமுக இயக்குனர்களிடம் மட்டுமல்ல, மாஸ் டைரக்டர் கௌதம் மேனனிடம் கூட பாரபட்சம் பாராமல் இதே இழுவைதான். ‘விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு நடித்தபோது, கௌதம் மேனன் படத்தில் நடிக்கிறோம் என்கிற பரவச பீலிங் இருந்தது.. அதனால் டான் டானென்று ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆஜாரானார்..
ஆனால் இப்போது கௌதம் மேனன் படத்தில் நடிக்கும்போது, என் படத்தை அவர் இயக்குகிறார் என்கிற மிதப்பு மட்டுமே சிம்புவிடம் அதிகம் உள்ளதுபோல தெரிகிறதாம்.. அவரது சொந்தப்படமான ‘இது நம்ம ஆளு’ படத்தைப்போல, கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்புக்கும் சரியானபடி வருவதில்லையாம்.
சமீபத்தில் நடந்த ஒரு சினிமா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய கௌதம் மேனன் இதை மறைமுகமாக குறிப்பிட்டார். “எனக்கு இங்கே படம் பண்ணுவதற்கு பணம் கிடைப்பது பிரச்சனையாக இல்லை.. ஹீரோ படப்பிடிப்புக்கு வருவதுதான் மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் ஹீரோ இல்லாமல் ஷூட்டிங்ஸ்பாட்டில் சும்மா உட்கார்ந்து பணத்தை செலவு செய்வது.. தெலுங்கில் படம் எடுப்பது ஈஸி என்பதால் பேசாமால் அங்கேயே போய்விடலாம் என தோன்றுகிறது” என்று பேசினாராம்.
பேசும்போதே இது யூடியூப்பில் எல்லாம் வராதே என முன்னெச்சரிக்கையாக கேட்டுக்கொண்டாராம்… பின்னே.. மிச்சப்படத்தையும் முடித்தாக வேண்டுமே.. இவர் ஆற்றாமையில் பேசியதை கேட்டு, சிம்பு ஆத்திரத்தில் ஷூட்டிங் வராமல் போய்விட்டால்..?