யுடிவியை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்தை முடக்கும் வேலைகளில் தயாரிப்பாளர் சங்கம் மும்முரம்..!

ஒரு சங்கம் என்பது தனது உறுப்பினர்களின் நலனுக்காகத்தானே செயல்படவேண்டும்.. அது சிறிய ஆளாக இருந்தாலும், பெரிய ஆளாக இருந்தாலும் பாரபட்சம் காட்டக்கூடாது.. ஆனால் இன்று தயாரிப்பாளர்களை காப்பாற்றுகிறேன் என்று சொல்லி சிக்கன நடவடிக்கைகள் என்கிற பெயரில் தயாரிப்பாளர்கள் சங்கம் விதிக்கும் கெடுபிடிகள் பெரிய, பெரிய கம்பெனிகளை எல்லாம் வரிசையாக தமிழ்நாட்டை விட்டு துரத்தும் வேலையைத்தான் செய்கின்றதோ என்றுதான் என்ன தோன்றுகிறது.

இதற்கு முதல் பலி யுடிவி நிறுவனம்… அவர்கள் வெற்றிப்படங்களை வேண்டுமானால் கொடுக்காமல் இருந்திருக்கலாம்… நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க தவறியிருக்கலாம். ஆனால் தோல்விப்படமானாலும் கூட, அதிலும் விட்டதையெல்லாம் பிடிக்க அவர்கள் நம்பியது, பயன்படுத்தியது எல்லாமே விளம்பரமும் மார்க்கெட்டிங் யுக்திகளும் தான்..ஆனால் அதற்குத்தான் தயாரிப்பாளர் சங்கம் இப்போது வேட்டு வைத்துள்ளது.

ஆனால் இப்போது தாயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள கெடுபிடிகளில் முக்கியமானது ஒரு படத்திற்கு குறிப்பிட்ட அளவுக்குள், குறிப்பிட்ட செலவுக்குள் தான் விளம்பரம் கொடுக்கவேண்டும் என்பது.. சின்ன படங்களை பெரிய படங்கள் தாங்கள் கொடுக்கும் பிரமாண்ட விளம்பரங்களால் பாதித்து விடக்கூடாது என்பதனால் தான் இந்த நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது.

இந்த சிஸ்டம் நமக்கு செட்டாகாது என்றுதான் ‘யட்சன்’ படத்தோடு யுடிவி தமிழுக்கு குட்பை சொல்லிவிட்டது. இனி தமிழில் நிலைமை சீரானால் மட்டுமே அவர்கள் திரும்பி வருவார்கள் என்றே தெரிகிறது. இப்போது இந்த கெடுபிடி நடைமுறைகளால் அடுத்த குறி, கல்பாத்தி அகோரமின் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாகத்தான் சமீபத்தில் அவர்கள் தயாரிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற ‘தனி ஒருவன்’ படத்திற்கு தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை மீறி அதிக பொருட்செலவில் விளம்பரம் பண்ணியதாக அந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து படங்களை விதிக்க தடைவிதிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் முன்னோட்டமாக அந்த நிறுவனத்திற்கு இதுகுறித்து சோ கால்டு நோட்டீஸ் ஒன்றும் கண் துடைப்புக்காக அனுப்பப்பட்டுள்ளதாம். கோடிகளை கொட்டி நல்ல படத்தை எடுக்கும் நிறுவனம், அதில் போட்ட பணத்தை எடுக்கவும், லாபம் பார்க்கவும் அவர்கள் பணத்தை செலவு செய்து விளம்பரப்படுத்துவதில் என்ன தவறு என மற்ற பெரிய நிறுவனங்களும் நினைக்க ஆரம்பித்து விட்டனவாம்.

இன்று யுடிவி மற்றும் ஏ.ஜி.எஸ்ஸுக்கு நேர்ந்த கதி நாளைக்கு நமக்கும் நேரலாம் என்கிற அச்சம் அவர்களிடம் தோன்றியுள்ளதாம். சிக்கன நடவடிக்கை என்கிற பெயரில் தயாரிப்பாளர்களிடம் கெடுபிடி காட்டும் சங்கம், நடிகர்களின் சம்பளத்தை வரைமுறைப்படுத்துவதில் கவனம் காட்டாதது ஏன் என்கிற கேள்வியையும் அவர்கள் எழுப்ப உள்ளார்களாம். அதனால் இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மிக விரைவில் பூகம்பம் வெடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றும் சொல்லப்படுகிறது.