சீண்டிய அரைவேக்காட்டு நிருபர் ; பதிலடி தந்த கேப்டன்..!


சமீபகாலமாக பத்திரிகையில் உள்ள சில நிருபர்கள் பிரஸ்மீட்டின்போது சினிமா, அரசியல் பிரபலங்களிடம் இங்கிதம் தெரியாமல், நாகரிகம் இல்லாமல் கேள்விகேட்டு அவர்களும் வாங்கி கட்டி கொள்வதுடன், மற்றம் நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு அவமானத்தை தேடித்தருகின்றனர். இளையராஜாவிடம் பீப் சாங் பற்றி கேட்க அவர் ‘அறிவிருக்காய்யா’ என திருப்பி கேட்டார்.

இப்போது விஜயகாந்திடம் அதிமுக பற்றி தேவையில்லாமல் கேட்க, அவரோ தூ.. நீங்கல்லாம் பத்திரிகையா என துப்பியிருக்கிறார். விஜயகாந்த் செயல் சரியானது என்று சொல்லவில்லை.. ஆனால் கேள்வி கேட்கும் நம்பக்கம் மட்டும் நியாயம் இருக்கிறதா என சில நடுநிலை நிருபர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்..

இந்த விவகாரத்தில் சில சீனியர் நிருபர்களிடம் பேச்சு கொடுத்தபோது அவர்கள் அனைவரின் எண்ணங்களும் மேற்கூறிய விஷயத்தையே பிரதிபலிப்பதாக இருக்கின்றன.. நியாமான சில கேள்விகளையும் அவர்கள் முன் வைக்கிறார்கள்..

ஊடகம் என்பது பேப்பர்களாக இருந்தவரை நாகரிகமாகத்தான் செயல்பட்டு வந்தது.. ஆனால் சேனல்கள் களத்தில் குதித்தபின், எந்த தகுதியும் இல்லாதவர்கள் பலரும் நிருபர்கள் என்கிற பெயரில், சிபாரிசால் வேலைக்கு சேர்கின்றனர்.. எந்த நிகழ்ச்சிக்காக செல்கிறோம், அங்கே யாரிடம் எந்த முறையில் கேள்வி கேட்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் வாய்க்கு வந்த கேள்வியை கேட்டு எதிரில் இருப்பவர்களை சூடாக்குகின்றனர்..

‘உங்க பொண்டாட்டி இன்னொருத்தன் கூட ஓடிப்போயிட்டாளாமே என கேள்விகேட்டால், ஆமாங்க நான்தான் அனுப்பி வச்சேன் என்று அமைதியாகவா பதில் வரும்… கன்னம் பழுக்காமல் இருந்தால் சரி.. அப்படியானால் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க கூடாதா..? கேட்டால் இப்படி திட்டுவதா என சிலர் கொதிக்கிறார்கள்..

கேளுங்கள்.. தாராளமாக கேளுங்கள்… மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இந்த தள்ளாத வயதிலும் தனது காசை செலவு பண்ணி, வெள்ள நீரில் இறங்கி மக்களுக்கு சேவை பண்ணிய இளையராஜா, அதற்காக உதவிய இளைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தியபோது, அந்த நேரத்தில் அவரிடம் ‘பீப் சாங்’ பற்றி சொல்லுங்கள் என கேட்டாரே, ஒரு தற்குறி நிருபர், அந்தமாதிரி கேட்காமல் ஆரோக்கியமான கேள்வியாக இருக்கவேண்டும்..

விஜயகாந்திடம் கேள்விகேட்ட நிருபரும் இதேபோலத்தான் அநாகரிகமான கேள்வியை கேட்டுள்ளார்.. விஜயகாந்த் வந்தது ரத்த தான முகாமுக்கு.. அது பற்றி கேட்பதுதான் முறை.. அப்படியே அரசியல் பற்றி கேள்வி கேட்க வேண்டுமானாலும் அது நாகரிகமாகத்தான் இருக்கவேண்டும்..

அவரும் ஒன்றும் சும்மா இல்லை. மழை கொட்டி தீர்த்த சமயத்தில் ஹெலிகாப்டரில் வரவில்லை.. சேற்றில் தான் நடந்து வந்தார்.. நிவாரண பொருட்களை வழங்கினார்.. குவிந்து கிடந்த குப்பைகளை கட்சியினருடன் சேர்ந்து அள்ளினார். தவறாமல் ஊடகங்களை சந்தித்து வருகிறார்.

இன்னொரு விஷயம் நன்றாகவே புலப்படுகிறது.. ஒவ்வொருமுறை விஜயகாந்த் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதும் யாரோ சில நிருபர்கள் அவரை கோபப்படுத்தும் விதமாக கேள்வி கேட்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்கள்.. அவர் எதிர்க்கட்சி தலைவர் என்றாலும் அவரும் கோபதாபங்கள் நிறைந்த மனிதர் தான்.. அதை ஏன் தேவையிலாமல் தூண்டி விடுகிறீர்கள்

ஆனால் விஜயகாந்தை இப்படி சகட்டுமேனிக்கு கேள்வி கேட்கும் இந்த சோ கால்டு நிருபர்கள், முதல்வரிடம் இப்படி எக்குத்தப்பான கேள்விகளை கேட்பார்களா..? இல்லை கேட்கத்தான் முடியுமா..? அமைச்சரிடம்.. அவ்வளவு ஏன் ஒரு ஆளுங்கட்சி கவுன்சிலரிடம் சென்று எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் இருக்கிறதா..?

செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்ட தவறை இதுவரை எந்த மீடியாவாவது வன்மையாக கண்டித்துள்ளதா என்றால் இல்லை.. ஆனால் மக்களுக்காக இறங்கி வேலை பார்த்த இளையராஜாவையும், விஜயகாந்தையும் கேள்வி கேட்டு சூடாக்கி, அவர்களை கொபமாக்கி வார்த்தைகளை விட வைத்து பின் அவரை திட்டுகிறோம்.. இதில் எந்த நியாயமும் இல்லை என்பதே பெரும்பாலான பத்திரிகையாளர்களின் கருத்தாக இருக்கிறது..

ஆகவே பத்திரிகைகள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.