இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் சந்தானம்..?


தமிழ்சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களை போல காமெடி நடிகர்களும் அவ்வப்போது இரு துருவங்களாக போட்டிக்களத்தில் நிற்கத்தான் செய்தார்கள்.. கவுண்டமணி-செந்தில், விவேக்-வடிவேலு, சந்தானம்-சூரி என ஒவ்வொரு காலகட்டத்திலும் இருவிதமான நகைச்சுவை விருந்து ரசிகர்களுக்கு கிடைத்து வந்தது.

இதில் சந்தானம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. தானும் ஹீரோவாகி, டூயட் பாடவேண்டும் என ஆசைப்பட்டு ரூட்டை மாற்றினார்.. ஆனால் அவர் நினைத்தபடி நடந்ததா..? அவர் எதிர்பார்த்து போனது கிடைத்ததா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்.

ஹீரோவாக அவர் நடித்த படங்களுக்கு ஓரளவு லாபரீதியான வரவேற்பு இருக்கவே செய்தது.. மறுப்பதற்கில்லை.. ஆனால் ஒரு படத்தை முடித்துவிட்டு இன்னொரு படத்தில் நடிப்போம் என நினைக்காமல் சிலரின் தவறான வழிகாட்டுதலால் மூன்று நான்கு படங்களை ஒப்புக்கொண்டு தானே வலிய ஒரு இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொண்டார்.

இப்போதுவரை அவர் நடித்து முடித்துவிட்ட சர்வர் சுந்தரம், மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும் என மூன்று படங்கள் வருடக்கணக்கில் ரிலீசாகாமல் இருக்கின்றன. அவை எதனால் ரிலீசாகாமல் இருக்கின்றன என்பதும் மர்மமாகவே இருக்கிறது. இந்தநிலையில் தற்போது சந்தானம் நடிக்கிறார் என ‘தில்லுக்கு துட்டு-2’ படத்திற்கு பூஜை போட்டுள்ளார்கள்.

காமெடி நடிகராக வருடத்திற்கு பத்து, பதினைந்து படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய சந்தானத்தை கிட்டத்தட்ட ரசிகர்கள் மறந்துபோகும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இப்போது யோகிபாபுவின் காலம்.

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் சந்தானம்..?