இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கிய, “இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி”-யில் நாயகனாக நடித்தவர் வடிவேலு. அந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்க, வடிவேலு நடிக்க தயாரானார்.
இதற்காக பிரமாண்டமான அரண்மனை செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது வந்தது. சில தினங்களிலேயே இயக்குநர் உடன் மோதலில் ஈடுபட்டதால் மாதக்கணக்கில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்று வடிவேலு சொல்லவே, புலிகேசி-2 படத்திற்காக தான் செலவு செய்ததை நஷ்ட ஈடாக வடிவேலு தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் டைரக்டர் ஷங்கர். அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் வடிவேலு கலந்து கொள்ளாததால் அவர் மீது ரெட் கார்டு விழும் என்று கூறப்பட்டது.
அதேசமயம் வடிவேலுவும் தன் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லி நஷ்ட ஈடு கேட்டார். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்போது ஒரு சுமூகமான சூழல் எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, தன்னால் ஷங்கருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட, அவர் கமலை வைத்து இயக்கும் இந்தியன்-2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக வடிவேலு கூறியிருப்பதாகவும், கால்ஷீட் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன்மூலம் வடிவேலு – ஷங்கர் இடையே சுமூக உறவு ஏற்பட்டிருப்பதால், விரைவில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதேசமயம் புலி படத்தை இயக்கியதை தொடர்ந்து அந்தப்படம் தோல்விப்படம் என்றாலும் கூட சிம்புதேவன் ஷங்கரிடம் வடிவேலுவிடமும் ஓவர் பந்தா காட்டினாராம்.. அவரை வழிக்கு கொண்டுவரத்தான் ஷங்கரும் வடிவேலுவும் கொஞ்சம் விட்டுப்பிடித்து நாடகம் ஆடினார்கள் என்று விவரம் அறிந்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.