குடிபோதையில் வண்டி ஓட்டி ஒரு உயிரை கொன்று, நான்கு உயிர்களை காயப்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து வருடம் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அவரும் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். எல்லாம் சட்டப்படி தானே நடந்துள்ளது..
இதில் சல்மான் கைதால் பாலிவுட் இயக்குனர் ஒருவர் தன் இதயமே வெளிவந்துவிட்டதாக கூறுகிறார். இன்னொருவர் சல்மான்கான் மிகச்சிறந்த மனிதர் என்கிறார். அதற்கெல்லாம் மேலாக நம்ம ஹன்ஷிகாவோ, சல்மானின் கைதால் தனது இதயமே நொறுங்கிவிட்டதாக டிவிட்டரில் கண்ணீர் விட்டு கதறுகிறார்..
சல்மான்கான் ஒன்றும் நாட்டுக்காக போராடியோ, அல்லது ஏழை மக்களுக்காக போராடியோ அதனால் வஞ்சகமாக சிறையில் அடைக்கப்படவில்லையே.. அவர் சிறந்த மனிதர் என்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டியிருக்க கூடாது. அப்படி ஓட்டி விபத்து ஏற்படுத்தியபின், பழியை இன்னொருவர் மேல் போட்டு தான் தப்பிப்பதற்காக வழக்கை 13 ஆண்டுகள் இழுத்தடித்திருக்க கூடாது.
இப்போது அனுதாபப்படும் பிரபலங்கள் யாரும் விபத்தில் செத்துப்போனவனுக்காக ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தியிருப்பார்களா..? சரி சிந்தவேண்டாம்.. ஆனால் அதற்கு காரணமானவன் ஒரு பெரிய மனிதன், சினிமா நடிகன், தாங்களில் ஒருவன் என்பதால் மட்டும் என்ன துடிப்பு.. என்னதுடிப்பு பார்த்தீர்களா..?
‘சூர்ய பார்வை’ என்கிற படத்தில் கவுண்டமணியை லாக்கப்பில் தூக்கி போட்டுவிடுவார்கள்.. அங்குள்ள கைதிகளிடம் சகஜமாக பழகுவார் கவுண்டமணி. சிலமணி நேரங்களிலேயே அவர் விடுதலையாகி கிளம்பும்போது ஒரு கைதி அண்ணே எங்களையெல்லாம் விட்டுட்டு போறீங்க.. உங்களை பிரிஞ்சு நாங்க எப்படிண்ணே இருப்போம் என உருகுவார்..
அதற்கு கவுண்டமணி சொல்வார் பாருங்கள்… “ஏண்டா கட்டுன பொண்டாட்டி, பெத்த பிள்ளைகள தவிக்க விட்டுட்டு ஜெயிலுக்கு வந்துருக்குற நாயி, ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி பார்த்த என்னைய பிரியறதுக்கு அழுறியா.. படுவா ஒதச்சே போடுவேன்” என சொல்லிவிட்டு போவார்.
ஹன்ஷிகா மாதிரி ஆட்கள் புலம்புவதை பார்க்கும்போது கவுண்டமணி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.