இசைஞானி இளையராஜா பொதுவாக விழாக்களில் கலந்துகொள்வது ரொம்பவே அபூர்வம்.. அவருக்கு மனதிற்கு பிடித்தால் மட்டுமே ஒரு விழாவில் கலந்துகொள்வார்.. அது தான் இசையமைத்த படத்தின் விழாவாக இருந்தாலும் சரி.. அந்தவகையில் வேலு பிரபாகரன் இயக்கியுள்ள ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ படத்துக்கு இசையமைத்துள்ள இளையராஜா, தெய்வாதீனமாக இன்று மாலை நடைபெற்ற அந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் வருகை தந்தார்.
கூடவே கலைப்புலி தாணு, இயக்குனர் ஸ்டேன்லி, பாடலாசிரியர் சினேகன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.. இயக்குனர் வேலுபிரபாகரன், கலைபுலி தாணு ஆகியோர் பேசும்போதெல்லாம் புன்சிரிப்புடன் கவனித்துக்கொண்டிருந்த இளையராஜாவை அடுத்து பேசிய சினேகனின் ஆவேச பேச்சு மூட்டு அவுட் ஆக்கியது.
இத்தனைக்கும் இளையராஜாவை புகழ்ந்துதான் பேசினார் சினேகன்.. ஆனால் அது கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிவிட்டது. அப்படி என்ன பேசினார் சினேகன்..? விழாவில் சினேகன் பேசும்போது, இளையராஜாவை புகழ்வதாக நினைத்துக்கொண்டு, “இளையராஜாவின் பெயரில் கல்லூரிகள் கட்டியிருக்க வேண்டாமா, நாலு தெருவுக்காவது அவர் பெயரை வைத்திருக்க வேண்டாமா” என ஆதங்கத்தில் பொங்கினார்.
ஆனால் பேசி முடித்து வந்த சினேகனை பார்த்து, இளையராஜா, “ரசிகர்களின் மனதில், உயிரில் ரத்தத்தோடு நான் கலந்துவிட்டபோது நாலு தெருவுக்கு என் பெயரை வைப்பதால் தான் என் பெயர் நிலைத்து நிற்குமா என்ன..?” என கேட்டவர், அடுத்து மேலும் பேசாமல் விடுவிடுவென இறங்கி சென்றுவிட்டார். இசைஞானியின் பேசி கேட்கலாம் என ஆவலுடன் அமர்ந்திருந்தவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகினார்கள்.