‘கடவுள் பாதி மிருகம் பாதி’ ஒரே நாளில் நடக்கும் பரபர சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர்!
இருளும் ஒளியும், மேடும் பள்ளமும், உறவும் பகையும், இன்பமும் துன்பமும் இணைந்தே இருப்பவை. அதுபோல ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்ல குணமும் கெட்ட குணமும் இணைந்தே இருக்கின்றன. சூழலுக்கு ஏற்றபடி குணம் வெளியே தெரிகிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள இந்த நல்லவன் கெட்டவனில் எவன் எப்போது வருவான் என்று யாருக்கும் தெரியாது. இந்த கருத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம்தான் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’. உலகநாயகனால் பேசப்பட்ட இந்த வசனம் மிகப் பிரபலமானது. இந்த தலைப்பை பதிவு செய்து 3 ஆண்டுகள் காத்திருந்து படமாக்கி இருக்கிறார் ராஜ். இவர் மாடலிங், தயாரிப்பு விநியோகம் என்று பலவித அனுபவங்களைப் பெற்றவர், இந்த அனுபவங்கள் மூலம் சினிமாவைக் கற்றவர்.
ராஜ், ஜில்லட், டயோட்டா, அஜ்மல் பெர்ப்யூம்ஸ், சோனி வேகா டிவி போன்ற 50 விளம்பரங்களுக்கு பெங்களுர், துபாய் என்று மாடலிங் செய்தவர்.
150 பேஷன் ஷோக்களில் பங்குபெற்றவர். ஏற்கெனவே மலையாளத்தில் பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸைவைத்து ‘அன்வர்’ படம் தயாரித்தவர், ‘பைசா பைசா’ இவரது இன்னொரு தயாரிப்பு. சில படங்களை விநியோகமும் செய்திருக்கிறார்.
இவர் தனது செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட் நிறுவனம் மூலம் உருவாக்கி வரும் படம்தான் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’
படம் பற்றி பேச ஆரம்பித்த இயக்குநர் ராஜ், ‘இது ஒரு ரோடு த்ரில்லர் ‘ என்று தொடங்கினார்.
அப்படியானால் ராம் கோபால் வர்மாவின் ‘ரோடு’ லிங்குசாமியின் ‘பையா’, வெற்றிமாறனின் ‘உதயம் NH4′ இம்தியாஸ்அலியின்,’ஹைவே’போலவா என்ற போது-
“இது ரோடு சைடு த்ரில்லர் தான். ஆனால் அவை போலிருக்காது. வேறு வகையான கதை. இந்தக் கதை நடப்பது சென்னை டு ஹைதராபாத் பழைய ஹைவேயில். முதல்நாள் இரவு தொடங்கி மறுநாள் இரவில் முடிகிறது. இது ஒரே நாளில் நடக்கும் கதை.
ஹைவேயில் பயணம் செய்யும் சில முக்கிய கேரக்டர்கள் அவை சந்திக்கும் சம்பவங்கள்தான் பரபரப்பான சஸ்பென்ஸ். இந்தப் பயணத்தில் காதல்ஜோடி ஒன்றும் தமிழ்நாடு,ஆந்திராபோலீஸ்காரர்கள் மட்டுமல்ல ஒரு முக்கியமான வினோதமான கேரக்டரும் பயணம் செய்கிறது. அந்த வினோதனுக்கு பெயர் எதுவும் கிடையாது. அவன் ஏன் காதலர்களை தொடர்கிறான்? அவன் நல்லவனா கெட்டவனா.. என்பதுதான் கதை பயணிக்கும் பாதை.. ” என்கிறார்.
படத்தில் அந்த வினோத பெயரில்லாத பாத்திரத்தை இயக்குநர் ராஜ் ஏற்று நடித்துள்ளார். காதல் ஜோடியில் காதலனாக அபிஷேக் வருகிறார்.இவர் ஆர்யா தயாரிக்கும் ‘படித்துறை’ யின் நாயகன். மலையாளத்தில் மோகன்லாலின் ‘கேஸினோவா’ படத்தில் லட்சுமிராயுடன் ஜோடியாக நடித்தவர். இப்படத்தில் அபிஷேக்கிற்கு ஜோடியாக மிஸ் இந்தியா ஸ்வேதா விஜய் நடித்துள்ளார்.
‘மைனா’ சேதுவும் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார்.
குத்துப்பாடல் காட்சியில் மும்பையின் சூப்பர் மாடல் சுரபி பிரபு ஆடியுள்ளார்.
ஒளிப்பதிவு கிஷோர் மணி. இவர் இதற்குமுன் மலையாளத்தில் மணியாற்றிய அனுபவம் பெற்றவர். இசை ராகுல்ராஜ். இவர் தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் சித்தார்த், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்த ‘ஒ மை ப்ரண்ட் ‘ மற்றும் மலையாளத்தில் ப்ருத்விராஜ் நடித்த ‘லண்டன் பிரிட்ஜ்.’ ‘பேச்சுலர் பார்ட்டி’ வெற்றிப் படங்களுக்கு இசையைத் தந்தவர்.
இப்படத்தில் 3 பாடல்கள். கருணாகரன் எழுதியுள்ளார். இவர் ‘அலெக்ஸ் பாண்டியனில்’ ‘பேட் பாய்ஸ்’ பாடல் மற்றும் ‘டமால் டுமீல்’ படப் பாடல்கள் எழுதியிருப்பவர்.
இதுவரை 55 நாட்கள் படப்பிடிப்பு நடந்து 90% முடிந்துள்ளது.
நடித்து தயாரித்து இயக்கியுள்ள ராஜ் தன் இணை இயக்குநர் சுரேஷின் பெயரையும் தன் பெயருடன் இணைத்து கதை திரைக்கதை இயக்கம் ராஜ் & என்று இணையாகப் போட்டுக் கௌரவித்துள்ளார். மதுரைக்காரரான சுரேஷ்- இயக்குநர்கள் ஹரி, சுந்தர்.சி ஆகியோரிடம் சினிமா கற்றவர். .
சஸ்பென்ஸ், திகில், காதல், ஆக்ஷன் என எல்லா வணிக மசாலாப் பொருட்களும் தூவப்பட்ட கம கம த்ரில்லரான இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. கோடை விடுமுறையில் வெளியிடும் திட்டத்தில் மும்முரமாக இருக்கிறது படக்குழு.
இப்படத்தின் டீஸர் எனப்படும் சிறு முன்னோட்டம் எவ்வித விளம்பரமும் இல்லாமல் வெளியான சில மணிநேரத்தில் பத்தாயிரம் ஹிட்டடித்து இயக்குநரை பரவசப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.