இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது கனவுப்படம் என சொல்லி வருவது ‘குற்றப்பரம்பரை’ என்கிற படத்தைத்தான். அதை எப்படியேனும் இயக்கியே தீருவேன் என அடிக்கடி சொல்லி வருகிறார். அதேசமயம் எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை என்கிற நாவலை இயக்குனர் பாலா படமாக்க இருக்கிறார் என்கிற செய்திகளும் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
அவர்கள் இருவரும் இதுபற்றி வாய் திறக்காவிட்டாலும் இதனை வைத்து பாலாவுக்கு பாரதிராஜாவுக்கும் சிலர் சிண்டு முடிந்துகொண்டு இருக்கிறார்கள். பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரான ரத்னகுமார் எங்களை மீறி குற்றப்பரம்பரை படத்தை எடுத்தால் பல தலைகள் உருளும் என்கிற ரீதியில் பேசி இருக்கிறாராம்.
இத்தனைக்கும் இரண்டும் வேறுவேறு கதைதான். களவு செய்வதையே தொழிலாக கொண்ட கூட்டத்தை பற்றிய கதைதான்..இங்கே இப்டி ஒரு பிரச்சனை இந்த கதையை வைத்து புகைந்துகொண்டு இருக்க, மலையாளத்தில் மெகாஸ்டார் மம்முட்டியை வைத்து இதே பின்னணியில் ஒரு படம் எடுக்கப்படுவதற்கான ஆயுதத வேலைகள் நடைபெற்று வருவது இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லைதான்..
படத்தின் கதையை நிஷாத் கோயா என்பவர் எழுதுகிறார். மம்முட்டியை ஏற்கனவே ‘தப்பன்னா’ படம் மூலம் இயக்கிய ஜானி ஆண்டனி தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். இவர்தான் சசிகுமாரை மலையாளத்தில் நடிக்கவைத்து ‘மாஸ்டர்ஸ்’ படத்தை இயக்கியவர்.. மம்முட்டி இந்த திருட்டுக்கும்பலில் ஒருவனாக நடிக்கிறாராம். ஆனால் இந்த திருட்டு கிராமம் என்பது தமிழகத்தில் உள்ளதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளதாம்.
அதுமட்டுமல்ல, தமிழில் இருபது வருடங்களுக்கு முன் பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘ராசய்யா’ படத்திலும், பத்து வருடங்களுக்கு முன் சமுத்திரக்கனி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘நெறஞ்ச மனசு’ படத்திலும் ஒரு கிராமமே திருட்டு தொழிலை பரம்பரை பரம்பரையாய் செய்து வருவதையும் அதிலிருந்து விலகிய ஹீரோ, தான் திருந்துவதோடு மற்றவர்களை எப்படி நல்வழிப்படுத்துகிறார் என்பதையும் காட்டியிருந்தார்கள். சமீபத்தில் வெளியான ‘தொப்பி’ என்கிற படத்தின் கதைக்களம் கூட இதேபோலத்தான்.
அதனால் ரத்னகுமார் போன்றவர்கள் இந்த கதை விஷயத்தில் அலட்டிக்கொள்வது தேவையில்லாத ஒன்று என்றே தான் தோன்றுகிறது.