முன் ஜாமீன் கிடைத்ததற்கே ‘தர்மம் வென்றது’ ஸ்லைடு போட்ட டி.ஆர்..!


பீப் சாங் தொடர்பாக சிம்புவின் ஜாமீன் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிம்பு மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ஜாமீனில் வெளிவரக்கூடியது தான். எனவே அவருக்கு இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்கப்படுகிறது என்று கூறினார். அதேசமயம் இந்த வழக்கில் குரல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கேட்டுள்ளதால் போலீஸ், விசாரணைக்கு அழைத்தால் சிம்பு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை கேட்ட சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை நீதிபதியிடம் எடுத்து உரைத்தோம். அதன்படி இந்த வழக்கில் இன்று எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து.. தர்மம் வென்றது என பத்திரிகையாளர்களிடம் நெக்குருகி பேசியுள்ளார்..

இதை கேட்ட சில மூத்த பத்திரிகையாளர்கள் முன் ஜாமீன் தானே கிடைத்திருக்கிறது.. அதற்கே மனுஷன் இந்த அளவுக்கு ஆனந்தப்படுறார்னா, மகன் ஜெயிலுக்கு போயிருவாரோன்னு என்னமா மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் என பேசிக்கொண்டார்கள்..

டி.ஆருக்கு இது உடனடி சந்தோசம் என்றாலும் அடுத்த சோதனை ஒன்று காத்திருக்கத்தான் செய்கிறது. ஆம்.. கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸில் சிம்பு ஆஜராவது தொடர்பாக நடந்த விசாரணையில், ஜன-5ஆம் தேதிக்கு பதில் ஜன-11ஆம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸில் சிம்பு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.. ஆக மழை விட்டாலும் தூவானம் விடாத கதைதான்.