சரத்குமாருக்கு என தனிக்கட்சி இருந்தாலும் அவர் எப்போதும் தன்னை அ.தி.மு.க ஆதரவாளராகவே காட்டிக்கொள்வார். இதன்மூலம் அம்மா ஆதரவு தனக்கு இருப்பதாக திரையுலகினரிடம் காட்டிக்கொண்டு, சில பல காரியங்களை சாதித்துகொண்டதாக சொல்லப்பட்டு வந்தது. இந்தமுறை நடிகர்சங்க தேர்தல் விவகாரத்தில் அம்மாவின் சப்போர்ட் தனக்கு கிடைக்கும் என நினைத்த சரத்குமாருக்கு வரிசையாக இரண்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் முதல்வர் அம்மா.
சங்கத்தில் இருக்கும் அதிமுக உறுப்பினர்கள் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், ஒரு சார்பு நிலை எடுக்காமல் நடுநிலையுடன் தங்களுக்கு பிடித்தவருக்கு ஓட்டுப்போடவேண்டும் என்றும் அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் மூலமாக தகவல் சொல்லப்பட்டது.
ஆனால் அ.தி.மு.கவில் பிரச்சார பேச்சாளராக இருக்கும் பாத்திமா பாபு இதைமீறி சரத்குமார் அணியில் தன்னை முன்னிலைப்படுத்தி வலம் வந்தார். அதுமட்டுமல்ல, சரத்குமார் வேட்புமனு தாக்கல் செய்தபோது கூடவே சென்று வாழ்த்து தெரிவித்தார். அடுத்த நாளே அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது.
இது மறைமுகமாக சரத்குமாருக்கு தனது ஆதரவு இல்லை என்பதை அம்மா சொல்லாமல் சொல்லிவிட்டார் என காட்டுவதாக இருந்தது. இதுதவிர்த்து ஆச்சி மனோரமாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தவந்த முதல்வர், அங்கிருந்த பிரபுவிடம் துக்கம் விசாரித்துவிட்டு கிளம்பினாரே தவிர, கொஞ்சம் தள்ளி நின்றிருந்த சரத்குமாரை கண்டுகொள்ளவே இல்லை.
முதல்வர் கிளம்பும்போது காரின் அருகில் ஓடிவந்து பேச முயற்சித்த சரத்குமாரை அதிகாரிகள் தடுத்துவிட்டனர்.. இதன்மூலம் நடிகர்சங்கத்தில் சரத்குமாரின் செயல்பாடுகள் சரியில்லை என அம்மா முடிவு செய்துள்ளதாகவும், அதனால் தான் அவரை கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.