விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நடிகர்சங்க தேர்தலில் விஷால் அணி ஜெயித்த நிலையில் இன்று, சரத்குமார் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லியிருக்கிறார்.. அதாவது கடந்த செப்-29ஆம் தேதியே எஸ்.பி.ஐ சினிமாஸுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இது திரையுலகில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் நடிகர்சங்க இடத்தில் புதிய கட்டடம் கட்ட எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்பதுதான் விஷால் அணியின் முக்கிய வேண்டுகோளாக இருந்தது. அதுமட்டுமல்ல,, அதற்கு பதிலாக நாமே நமக்கு தேவையான கட்டடத்தை கட்டிக்கொள்ளலாம் என்றும் விஷால் தரப்பினர் வலியுறுத்தியதும், அதற்கு சரத்குமார் அணி ஒப்புக்கொள்ளாததும் தான் நடிகர்சங்க தேர்தல் இந்த அளவுக்கு தீவிரமாக காரணமே..
தற்போது பொறுப்புக்கு விஷால் அணியினர் வந்துவிட்ட நிலையில், அவர்களது முதல் நடவடிக்கை இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முயற்சியாகத்தான் இருக்கும் எனவு எதிர்பார்க்கப்பட்டது.. ஏற்கனவே இதுபற்றி பேசியுள்ள விஷால், எப்படியாவது எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்திடம் கெஞ்சி கூத்தாடியாவது ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வைப்போம் என்று சொல்லியிருந்தார்.
ஆனால் இப்போது செப்-29ஆம் தேதியே எஸ்.பி.ஐ சினிமாஸுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டேன் என சரத்குமார் கூறியுள்ளார். பொதுவாக இதுபோன்ற ஒப்பந்தங்களை ரத்து செய்வதை கௌரவ குறைச்சலாக நினைத்து வழக்கு போடும் அளவுக்கு பல பெரிய நிறுவனங்கள் போகும் என்பதுதான் நாம் இதுவரை பார்த்து வந்தது. ஆனால் எஸ்.பி.ஐ சினிமாஸ் இவ்வளவு எளிதாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய முன்வந்ததது ஏன்..?
நடக்கும் அனைத்து பிரச்னைகளையும் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் மேல் பரிதாபப்பட்டு ரத்து செய்ய ஒப்புக்கொண்டார்கள் என சரத்குமார் கூறியுள்ளார். ஆனாலும் அதன் பின்னணியை அலசியதில், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒப்புக்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் தங்களுக்கு சிக்கல் என்பதை உணர்ந்ததால் தான் அவர்களாகவே முன்வந்து ஒப்பந்தத்ததை விலக்கி கொண்டார்களாம்..
அப்படியென்ன சிக்கல் அவர்களுக்கு வந்துவிடும்..? எஸ்.பி.ஐ சினிமாஸ் என்பது திரைப்படங்களை மட்டும் நம்பியே தனது வியாபர எல்லையை விஸ்தரித்து வரும் நிறுவனம்.. இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய முன்வராவிட்டால், ஒருவேளை விஷால் அணி பொறுப்பேற்கும் பட்சத்தில் தங்களது திரையரங்குகளுக்கு படங்களை தரக்கூடாது என அவர்கள் முடிவு செய்தால் அது தங்கள் அடிமடியிலேயே கைவைத்த கதையாகிவிடும் என்பதால் தான் தானாகவே இந்த நிறுவனம் இறங்கி வந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது..
இந்த ஒப்பந்த ரத்து விவகாரத்தை முன்கூட்டியே சொல்லியிருந்தால் தங்களது தரப்பு பலவீனமாகிவிடும் என்பதால்தான் சொல்லாமல் மறைத்துவிட்டாராம் சரத்குமார். இப்படி பண்ணிட்டீங்களே பசுபதி..?