நாகராஜா சோழன், கங்காரு என இரண்டே படங்களைத்தான் தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. ஆனாலும் மனதில் பட்டதை பளிச்சென மேடையில் பகிரங்கமாக பேசக்கூடியவர் தான் இவர். தவறு என தெரிந்தால் அது, தான் சார்ந்திருக்கும் தயாரிப்பாளர் சங்கம் என்றால் கூட ஒரு பிடிபிடித்து விடுவார்.
நேற்று நடைபெற்ற ‘நேர்முகம்’ பட இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த சுரேஷ் காமாட்சி, படங்களுக்கு மானியம் வழங்கப்படாதது குறித்த தனது ஆற்றாமையை காரசாரமாக வெளிப்படுத்தினார்.; அவர் பேச்சில் இருந்து ஒரு பகுதியை கேட்போமா..?
“தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுறாங்க. மானியம் கொடுத்து 8 வருஷமாச்சு. ரெண்டு ஆட்சி மாறியாச்சு. தயாரிப்பாளர் சங்கத்துல மூணு தடவை நிர்வாகிகள் மாறியாச்சு. ஆனா, இந்த மானியம் விஷயத்துல இதுவரை ஒண்ணும் பெரிசா நடக்கலை. இவங்க நேரடியாக தமிழக முதல்வர்கிட்ட கேட்கல.
தேர்தல் நேரத்துல நாடகம் போடக்கூடாதுன்னு சொன்னா நாடகக்கலைஞர்கள் பாதிக்கப்படுவாங்கன்னு நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் கமிஷனரை நேரா பார்த்து பேசுறாங்க. மனு கொடுக்கிறாங்க. ஆனா, தயாரிப்பாளர் சங்கநிர்வாகிகள், சங்க உறுப்பினர்களுக்காக அப்படி செயல்பட்ட மாதிரி தெரியல.
ஒரு படத்துக்கு மானியம்கேட்டு அப்ளிகேசன் கொடுக்கிறப்போ அதற்குகட்டணமாக ஒவ்வொரு படத்துக்கும் அந்த படம்சார்பாக ரூ.1000/-தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அரசுக்கு கடந்த எட்டு வருசமா போயிட்டிருக்கு. அதனால மானியம் கேட்டு விண்ணப்பிக்கிறது அந்தத் துறை சம்பந்தமான அரசு அதிகாரிகளுக்கு நல்லாவே தெரியும். எல்லாப் படத்தையும் பார்த்தாச்சுன்னும் சொல்றாங்க.
ஆனா, ஏன் எட்டு வருசமா நிறுத்தி வச்சிருக்காங்க அப்டிங்கிறதுக்கு எந்தவிபரமும் தெரியல. எனக்குத் தெரிந்து நாம் அரசை சரியான முறையில் அணுகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இனியாவது நடிகர் சங்கம் முதல்வரை அணுகுவதைப் போல் தயாரிப்பாளர் சங்கமும் அணுக வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்” என பட்டாசு கொளுத்தியுள்ளார். இனியாவது நல்லது நடக்கிறதா என பார்க்கலாம்.