சர்கார் கதை பிரச்சனையில் இயக்குனர் பாக்யராஜ் பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்கிற நோக்கில் போராடி, சம்பந்தப்பட்ட வருண் ராஜேந்திரன் என்பவருக்கு நியாயம் கிடைக்கும்படி செய்தார். முக்கியமாக அந்த வருண் கதையை பதிவு செய்து வைத்திருந்த ஆதாரம் தான் அவருக்கு வெற்றி கிடைக்க காரணமாக இருந்தது.
இந்த நிலையில் பாக்யராஜ் திடீரென எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகினார். சர்கார் பிரச்சனையினால் அவர் அனுபவித்த டார்ச்சர்கள், மன அழுத்தம், ஒரு சிலரின் எச்சரிக்கைகள் தான் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.
ஆனால் இதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு என இப்போது ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது தற்போது விஜய்சேதுபதி நடித்து வெற்றிபெற்ற ‘96’ படத்தின் கதையும் திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆனால் அந்த கதை தன்னுடையது தான் என சொந்தம் கொண்டாடும் சுரேஷ் என்பவர் கதையை முறைப்படி பதிந்து வைத்திருக்கவில்லை. அதேசமயம் இந்த கதையை இயக்குனர் பாரதிராஜாவிடம் பல வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளாராம் சுரேஷ்.
இந்த தகவலை பாராதிராஜாவே வெளியிட்டுள்ளதுடன் சுரேஷுக்கு ஆதரவாக இந்த பிரச்சனையில் குதிக்கவும் இருக்கிறார். நிச்சயம் இந்தப்பிரச்சனை எழுத்தாளர் சங்க பஞ்சாயத்துக்கு வரும்போது நியாயப்படி ‘96’ படத்தை இயக்கிய பிரேம்குமாரின் பக்கம் தான் தீர்ப்பு சாதகமாக இருக்கும். ஆனால் பாரதிராஜா தனது குருநாதர் என்பதால் எப்படி அவரை எதிர்த்து தீர்ப்பு சொல்வது என இந்த சங்கடத்தை தவிர்ப்பதற்காக பாக்யராஜ் முன்கூட்டியே தனது பதவியை ராஜினமா செய்துவிட்டார் என சொல்லப்படுகிறது.