கொரிய படத்தில் இருந்து காப்பியடிச்ச கதைக்கு 75 லட்சம் நஷ்ட ஈடு கேட்ட கதாசிரியர் ..?


ரோமியோ ஜூலியட் கூட்டணியான இயக்குனர் லட்சுமண், ஜெயம் ரவி, ஹன்ஷிகா இவர்களுடன் அரவிந்தசாமியையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு உருவாகிவரும் படம் ‘போகன்’.. கடந்த சில நாட்களாக ஆண்டனி தாமஸ் என்பவர் போகன் படத்தின் கதை தன்னுடையது என்றும், லட்சுமண் அதை திருடி ‘போகன்’ படமாக இயக்குகிறார் என்றும் சினிமா கதாசிரியர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்..

சங்கத்தின் பதவியில் இருந்த இயக்குனர்கள் இந்த பஞ்சாயத்தை விசாரித்தனர். ஆனால் தோண்ட தோண்ட பூதம் கிளம்புவதுபோல விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.. அதாவது ‘போகன்’ படத்தின் கதையும், புகார் கொடுத்த ஆண்டனி தாமஸின் கதையும் பல காட்சிகளும் ஒரேபோல் இருப்பது முதலில் தெரியவந்தது..

சரி என்ன பண்ணலாம் என ஆண்டனி தாமஸிடம் கேட்டபோது கதாசிரியர் என தனது பெயரை டைட்டில் கார்டில் போடவேண்டும், கதையின் ரீமேக் ரைட்ஸ் தனக்கு வேண்டும், 75 லட்ச ரூபாய் பணம் தரவேண்டும் என நிபந்தனைகளை அடுக்கியுள்ளார்.. முதல் இரண்டு விஷயங்களை சரி பண்ணி தருவதாகவும், பணம் மட்டும் பத்து லட்ச ரூபாய் வரை வாங்கி தருவதாகவும் அவரை சமாதானப்படுத்தினார்கள் சங்கத்தினர்.

ஆனால் போகன் இயக்குனரை அழைத்து விசாரித்தபோது, அவர் கொரிய படத்தின் டிவிடி ஒன்றை கொடுத்து அவர்களை பார்க்க சொல்லியிருக்கிறார்.. பார்த்தவர்களுக்கு செம ஷாக்.. காரணம் இந்த ரெண்டு பேருமே அந்தப்படத்தில் இருந்துதான் முழுக்கதையையும் காட்சிகளையும் சுட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது..

அதனால்தான் தனது கதை என்று இதை இயக்குனர் லட்சுமண் கதாசிரியர்கள் சங்கத்தில் பதிவு செய்யவே இல்லை.. ஆனால் ஆண்டனி தாமஸ் எந்த தைரியத்தில் இது தனது சொந்தக்கதை என பதிவு செய்து, இன்னொரு இயக்குனர் மீது புகாரும் கொடுத்தார் என்று தெரியவில்லை.

இதை கண்டுபிடித்ததும் ஆண்டனி தாமஸின் புகாரை அவரது முகத்தில் தூக்கியடித்து அவரை எச்சரித்து அனுப்பியிருக்கிறது சங்கம்.