அனைத்து சேனல்களிலும் கலக்கப்போகும் ‘பொங்கல்’ பாடல்!

அனைத்து சேனல்களிலும் கலக்கப்போகும் ‘பொங்கல்’ பாடல்!

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சேனல்களிலும் ஒரு படத்தின் பொங்கல் பற்றிய பாடல் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்தப்படம் ‘உள்ளம் உள்ளவரை’,

பொங்கலுக்கு ஏதேதோ பாடல்கள் ஒளிபரப்பாகும் .ஆனால் பொங்கல் பற்றிய பாடல் இருக்காது. அக்குறையைப் போக்கும் விதமாகவும் படத்தை விளம்பரப் படுத்தும் ப்ரோமோ போலவும் இப்பாடல் உருவாகியுள்ளது.

இந்துஜா பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘உள்ளம் உள்ளவரை’ .விஷ்ணுஹாசன். இயக்குகிறார்.’புதுநிலவு’ என்கிற படத்தை ஜெயராமை நாயகனாக்கி இயக்கித்
தயாரித்தவர்தான் இந்த விஷ்ணுஹாசன். சற்று இடைவெளிக்குப்பின் களத்துக்கு வந்திருக்கிறார். அதுவும் திரையுலக கால மாற்றத்தையும், ரசிகர்கள் உலக மன மாற்றத்தையும் புரிந்து கொண்டு வந்திருக்கிறார்.

எனவே காலத்துக்கேற்ற பரபரப்பு ,விறுவிறுப்பு, பதைபதைப்பு, கலகலப்பு கலந்த திகில் படமாக உருவாக்கி வருகிறார்.

கதாநாயகனாக ஆந்திர நாயகன் சங்கர் நடிக்கிறார்.

மீனு கார்த்திகா, ப்ரீத்தி, அங்கனாராய், காம்னாசிங் என நான்குபேர் நாயகிகள்.  கஞ்சா கருப்பு, மதன்பாப், மீரா கிருஷ்ணன், சித்ராலெட்சுமணன்,
பரவைமுனியம்மா, நந்தகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.நான்கு வில்லன்கள்.ஒருவர் கராத்தே சிவவாஞ்சி. இன்னொருவர் மும்பை வில்லன் நியாமத்கான். 

இவர்களுடன் தயாரிப்பாளர் நாமக்கல் கே.சண்முகமும் ஒரு வில்லனாக அறிமுகமாகிறார்.மற்றொருவர் .அஸ்வின்குமார், பழம் பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணனின் பேரனான அஸ்வின் குமார் ,இப்படத்தின் மூலம் ஒரு வில்லனாக அறிமுகம் ஆகிறார்.

கிராமத்திலிருந்து சென்னை வரும் இளைஞன் எதிர்பாராத வகையில் ஒரு கொலைப்பழியில் சிக்கிக் கொள்கிறான். செய்யாத குற்றத்துக்கு பழிசுமக்கும்
அவன் அதிலிருந்து மீண்டானா என்பதுதான் கதை.

கொலை செய்யப்பட்டவள் பேயாக மாறி எப்படி பழிவாங்குகிறாள். என்பது இன்னொரு சுவையான திக்திக் பயணம்.

பொள்ளாச்சி, ஆழியார், உடுமலைப் பேட்டை, சென்னை மட்டுமல்ல கர்நாடகா மாநிலத்தில் சில இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதுவரை 35
நாட்களில் பெரும் பகுதி படத்தை முடித்துள்ளார்கள்.

இயக்குநர் விஷ்ணுஹாசன் படம் பற்றிக் கூறும் போது, “சற்று இடைவெளிக்குப் பின் இரண்டாவது படத்தை இயக்கி வருகிறேன். இப்போது முன்பு மாதிரி இல்லை. திரையுலக சூழல் மாறியிருக்கிறது இதை உணர்ந்துதான் காலத்துக்கேற்ற படமாக இதை உருவாக்கி வருகிறேன்.இது சிக்கனத்தில் டிஜிட்டல் யுகமாக இருந்தாலும் செலவைப் பற்றிக்கவலைப்படாமல் பிலிமில் எடுத்துள்ளோம்.”. என்கிறார்.

பொங்கல்  பாடல் பற்றிக் கூறும் போது

”திகில் படம் என்பதால் படத்தில் இரண்டே பாடல்கள்தான். ஒன்று பாரில் பாடும்பாடல் இன்னொன்று பொங்கலின் பெருமையைப் பாடும் பாடல். பொங்கல்
பற்றியபாடல் வந்து நீண்ட நாட்களாகி விட்டன. இந்தப் பாடல் அந்தக் குறையைப் போக்கும் படி இருக்கும். சினேகன்தான் எழுதி யுள்ளார். விஜய் ஏசுதாஸ்
,ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர்.சதிஷ் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.’சர்க்கர பொங்கல் ..கன்னிப்பொங்கல் .. இது காணும் பொங்கல்..  காதல் பொங்கல்’ என்கிற இந்தப்பாடல் வரும் பொங்கலுக்கு அனைத்து டிவி சேனல்களிலும் ஒளிபரப்பாகி கலக்கப் போகிறது.”என்கிறார்.

‘உள்ளம் உள்ளவரை’ படத்தில் பல திறமைசாலிகளுடன் கூட்டணி அமைத்து பணியாற்றியிருக்கிறார். இயக்குநர்.

ஒளிப்பதிவு செய்துள்ளவர் பி.கே.எச்.தாஸ் இவர் கன்னடத்தில் 65 படங்கள் ஒளிப்பதிவு செய்துள்ளவர். மூன்று முறை மாநில அரசு விருதுகள்,
பிலிம்பேர்விருது. உள்பட பல விருதுகளை பெற்றுள்ளவர். படத்தில் அனைத்துக் காட்சிகளிலும் தன் முத்திரையைப் பதித்து இருக்கிறார்.

இசை சதிஷ் சக்கரவர்த்தி, முன்னேறி வரும் இசையமைப்பாளர். இரண்டே பாடல்கள் என்றாலும் பின்னணி இசையில்  மின்னிடுவார். சண்டைக் காட்சிகளை அனுபவசாலி ஆக்ஷன் பிரகாஷ் அமைத்துள்ளார்.நடனம் சுரேஷ் மாஸ்டர். எடிட்டிங் கே.தணிகாசலம் இவர் கே.எஸ். ரவிகுமாரின் ஆஸ்தான படத்தொகுப்பாளர்.

தயாரிப்பு மேற்பார்வை சுப்ரமணியன், தயாரிப்பு நிர்வாகம் ஏ. ஜெயப்பிரகாஷ். இணை இயக்கம் கோவை ரவிராஜன்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் விஷ்ணுஹாசன். இந்துஜா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பு- நாமக்கல் கே.சண்முகம். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடை பெற்று வருகின்றன. விரைவில் திரையில்.