அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனிதா. கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை. இதனால், நீட் தேர்வை எதிர்த்து தனி ஒருவராக போராடியும் பலனில்லாமல், கடந்த செப்டம்பர் 1ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அனிதாவை நினைவுபடுத்தும் விதமாக டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்தனர்.
அதேசமயம் டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ் என்கிற படத்தை எடுப்பதற்கான அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், அனிதா ஸ்டெதஸ்கோப்புடன் ஒரு தாமரையில் அமர்ந்திருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரில், Dr.S. அனிதா M.B.B.S, பெண்ணல்ல அதையும் தாண்டி புனிதமானவள்… என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனிதாவின் இந்தப்படத்தில் அவரது கதாபாத்திரத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் தமிழ் பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கயிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை அவரே, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேசமயம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் ஏற்கனவே ஜல்லிக்கட்டில் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டு, அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்த ஜூலியை அனிதா கேரக்டரில் நடிக்க வைப்பதை ஜீரணிக்க முடியவில்லை என்றுதான் பலரும் சோஷியல் மீடியாவில் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.