சர்கார் சர்ச்சையில் கம்முன்னு உம்முன்னு இருக்கும் விஜய்..?


கடந்த சில ஆண்டுகளாக விஜய் நடித்து வெளிவரும் படங்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த சர்ச்சை தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்திலும் எழுந்தது. ஆளும் அரசாங்கத்தை எதிர்க்கும் சில காட்சிகள் படத்தில் இருப்பதால் தமிழக அமைச்சர்கள் படத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்றார்கள். அதன்படி இன்று அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டு படத்திற்கு மறு தணிக்கை செய்யப்பட்டது.

‘சர்கார்’ படத்தில் விஜய்யின் ஹீரோயிசமான காட்சிகள் பல இருக்கின்றன. பாடல்களிலும் அப்படிப்பட்ட வரிகள் உள்ளன. திரையில் மட்டும் ஹீரோயிசத்தைக் காட்டிய விஜய், நிஜத்தில் நேற்றிலிருந்து ‘சர்கார்’ பட பேனர்கள் கிழிக்கப்பட்டதற்கு எந்த விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை. படத்திற்கு ஆதரவாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் மற்றும் பல நடிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ஆனால் ‘சர்கார்’ படத்தில் ‘ஒரு விரல் புரட்சி’ என்று பாடிய விஜய், அவரது பட பிரச்சனை தொடர்பாக இப்போதுவரை ஒரு குரல் கூட கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஒருவேளை சர்கார் ஆடியோ விழாவில், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும் இருக்கணும் என தான் சொன்னபடி விஜய் இருக்கிறாரோ என்னவோ என்று சோஷியல் மீடியாவில் பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.