திட்டமிட்டுப் படமெடுத்தால் நஷ்டம் வராது!- எஸ்,பி முத்துராமன் பேச்சு

ஜேபிஆர் பிலிம்ஸ் கோவை வழங்கும் ‘கிருமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இசைத்தட்டை வெளியிட்டு இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பேசினார்.அவர் பேசும் போது :

” இந்தக் ‘கிருமி’ படத்தைத் தயாரித்து இருக்கும் ரஜினி ஜெயராமன் என்னை கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைத்தார். அவர் சூப்பர்ஸ்டாருடன் நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர்.நான் இயக்கிய 25 படங்களில் 20 படங்களில் ரஜினிக்கு உதவியாளராக இருந்தவர் இந்த ஜெயராமன் தான். நானும் சூப்பர் ஸ்டாரை வைத்து படங்கள் இயக்கியவன் என்கிற முறையில் அவரை உரிமையோடு வாழ்த்துகிறேன்.அவர் சரியாக சம்பளம் கொடுத்ததாக எல்லாரும் கூறினார்கள். அப்போது எனக்கு ஏ.விஎம், நாகிரெட்டி,ஜெமினி எஸ்.எஸ்.வாசன், மாடர்ன்தியேட்டர்ஸ் சுந்தரம் என எல்லாரும் நினைவுக்கு வந்தார்கள். அந்த நேர்மையான தயாரிப்பாளர்கள் வரிசையில் ஜெயராமனும் சேர வாழ்த்துகிறேன்.

இங்கே சார்லி நன்றாகப் பேசினார். ஒருகாலத்தில் அவர் பாலசந்தரிடம் பேசவே பயந்து கொண்டு இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இப்போது தைரியமாகப் பேசுகிறார். வளர்ந்து இருக்கிறார். இங்கே இருக்கிற நடிகை வனிதா மிகவும் தைரியசாலி. ஒரு முறை என் படத்தின் படப்பிடிப்பு ஒன்று குற்றாலம் மலையில் நடந்தது. அதில் நடிக்கும் ஒய். ஜி. மகேந்திரன் மலையில் மேலே போகப் பயந்தார். எப்படிப் போவது என்று அவர் பயந்த போது வயதான ஒருவர் லட்சுமி நாராயணன் என்பவரை மேலே போக வைத்தேன். அவரை மேலே கொண்டு சேர்த்தது யார் தெரியுமா? இந்த வனிதாதான். அப்புறம்தான் ஒய்.ஜி.மகேந்திரன் மலையில் ஏறினார். அந்த அளவுக்கு மிகவும் துணிச்சலான நடிகை இந்த வனிதா.
படப்பிடிப்பின் போது மட்டும் தான் எங்கள் குழுவினர் பரபரப்பாக இயங்குவார்கள் படப்பிடிப்பு எல்லாம் முடிந்ததும் நண்பர்களைப் போல மாறி விடுவோம்.

நான் எழுபது படங்கள் இயக்கி இருக்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து 25 படங்கள், கமலை வைத்து 10 படங்கள், நடிகர் திலகத்தை வைத்து 3 படங்கள் இயக்கியிருக்கிறேன்.

இவை எப்படி முடிந்தது அந்தப் படங்கள் எல்லாம் எஸ்.பி முத்துராமன் என்கிற தனிப்பட்ட நபரின் வெற்றியல்ல,சாதனையல்ல. எல்லாமே எஸ் பி.எம். என்கிற படக்குழுவின் வெற்றி. இவை எப்படி முடிந்தது?. நன்கு திட்டமிட்டு எடுத்ததால்தான் முடிந்தது. திட்டமிட்டு படமெடுத்தால் நஷ்டம் வராது ,வெற்றி நிச்சயம். இதை எல்லாருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் கதை ‘காக்கா முட்டை’ மணிகண்டனின் கதை என்றார்கள். அவர் நமது பெருமையை உயர்த்தும்படி படம் எடுத்து இன்று பாராட்டைப் பெற்று வருகிறார்.அவரது கதையை இயக்கியுள்ள அனுச்சரணையும் என்னையும் மிஞ்சி வாழ்க என வாழ்த்துகிறேன்” என்றார்.அதுமட்டுமல்ல படக்குழுவினரின் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டும் வாழ்த்தினார்.

விழாவில் நக்கீரன் கோபால் பேசும் போது

”இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெயராமன் எனக்கு நெருங்கிய நண்பர்.நான் அண்ணன் ரஜினியைப் பார்க்கும் போதெல்லாம் அவரையும் பார்ப்பேன். ஒரு இடத்தில் இருக்க மாட்டார். ஓடிக் கொண்டே இருப்பார். ஜெயராமன் அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குபவர்.
மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ சமூகநோக்குள்ள படம் அதில் இப்படி ஒரு சமூகத்தோடுதான் வாழ்ந்து வருகிறோம் என்று அழகாகச் சொல்லியிருப்பார்.அந்த மணிகண்டனின் கதை என்பதால் இந்தக்’கிருமி’யும் சமூகம் சார்ந்த சிந்தனையோடுதான் இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இன்று படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? ஆனால் டிவிக்காரர்கள் படத்தை வைத்து சம்பாதிக்கிறார்கள். ‘பாட்ஷா’ படத்தை தயாரித்த அண்ணன் ஆர் எம்வீ இப்போது வீட்டில்தான் இருக்கிறார். ஆனால் சன்டிவியில் ஒருநாள் போடுகிற போதெல்லாம் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விடுகிறார்கள். ‘கில்லி’படத்தை தயாரித்த அண்ணன் ஏ.எம். ரத்னம் வீட்டில்தான் சாதாரணமாக இருக்கிறார். ஆனால் சன்டிவியில் ஒருநாள் போட்டு ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விடுகிறார்கள்.இந்தப் படத்தை தயாரிக்கும் ஜெயராமன் நேர்மையாக சம்பளத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார்கள்.நேர்மையாக உள்ளவர்கள் வெற்றிபெற வேண்டும்.தயாரிப்பாளர் ஜெயராமன் வெற்றிபெற நக்கீரன் என்றும் துணைநிற்கும் என்று கூறி படக்குழுவினரை வாழ்த்துகிறேன்.” என்றார்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ,துணைத்தலைவர்கள். பி.எல் தேனப்பன், கதிரேசன். தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சார்லி, படத்தின் நாயகன் கதிர், நாயகி ரேஷ்மி மேனன், நடிகை வனிதா, பாடகர் கானாபாலா, இசையமைப்பாளர் கே, ‘காக்கா முட்டை’ மணிகண்டன், ‘கிருமி’ யை இயக்கியுள்ள அனுசரண், ஒனிப்பதிவாளர் அருள் வின்சென்ட்,பாடலாசிரியர் ஞானகரவேல்,
தயாரிப்பாளர்கள் ரஜினி ஜெயராமன், கோவை ஜெயராமன், பிருத்திவிராஜ், ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.இறுதியாக ‘கிருமி’யை இயக்கியுள்ள அனுசரண் நன்றி கூறினார்.விழாவில் ஏராளமான ரஜினி ரசிகர்களும் ரஜினி மன்ற நிர்வாகிகளும் மட்டுமல்ல விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.