அம்மன், அருந்ததி வரிசையில் இடம்பிடிக்க வரும் ‘சிவநாகம்’!

அம்மன், அருந்ததி வரிசையில் இடம்பிடிக்க வரும் சிவநாகம்… மீண்டும் விஷ்ணுவர்தன்!

கிராஃபிக்ஸ் என்ற ஒரு விஷயம் வந்தாலும் வந்தது… அதை வைத்து தன் கற்பனைச் சிறகை எங்கெங்கோ பறக்க விடுகிறார்கள் சினிமாக்காரர்கள். அதுவும் பக்திப் படம், பேய்ப் படங்களுக்கு இந்த கிராஃபிக்ஸ் பெரும் வரப்பிரசாதமாகிவிட்டது.

இப்போது வரவிருக்கும் சிவநாகம் என்ற படம் பேன்டசி படங்களின் உச்சம் என்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இயக்கியுள்றார். இவரது 138 -வது படமாக சிவநாகம் வருகிறது.

இந்தப் படத்துக்காக ஒரு பிரமாண்ட பாம்பை கிராபிக்ஸில் உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் இன்னொரு சிறப்பு மறைந்த பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தனை அப்படியே அச்சு அசலாக கிராபிக்ஸில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இவர் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட விஷ்ணுவர்தன் என்று கர்ப்பூரம் அடித்துச் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு தத்ரூபம்.

மொத்தம் ரூ 40 கோடி செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அம்மன், அருந்ததி படங்களைப் போல அத்தனை மொழிகளிலும் ஹிட்டடிக்கும் படமாக சிவநாகம் அமையும் என்கிறார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.