இந்திரா சௌந்தர்ராஜன் கதையில் உருவாகும் மர்மத்தொடர் ‘சுப்ரமணியபுரம்’..!’
சின்னத்திரையில் நாளுக்கு நாள் புதுப்புது தொடர்கள் வெளியாகின்றன.. இதில் பல தொடர்கள் ஒன்றைப்போலவே இன்னொன்று இருப்பதையும் பார்க்க முடிகிறது.. அதனால் இந்த தொடர்களில் இருந்து மாறுபட்டு முற்றிலும் புதிய கதைக்களத்தில் திகில், மர்மங்கள் நிறைந்த தொடராக உருவாகிறது ‘சுப்ரமணியபுரம்’. இதன் துவக்கவிழா பூஜை ஏவி எம் கார்டன் வளாகத்தில் நடைபெற்றது.
வி. சங்கர் ராமன் தயாரிப்பில் உருவாகும் இந்த தொடரை ஹரீஷ் ஆதித்யா இயக்குகிறார்.. இவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது… கும்மாளம் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், மேலும் திருடா திருடி, மலைக்கோட்டை படங்களிலும், சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அதன்பின் சின்னத்திரை தொடர்களில் டைரக்சன் பக்கம் கவனத்தை திருப்பிய இவர் தற்போது ‘சுப்ரமணியபுரம்’ தொடரின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.
இது சுப்ரமணியபுரம் என்கிற ஊரை பற்றிய கதை. அந்த ஊரில் உள்ள கோயிலில் உள்ள சிலை ஒன்று காணாமல் போகிறது.அதனால் அந்த ஊர் சாபத்திற்கு ஆளாகிறது. அதையடுத்து அந்த ஊரில் நடக்கும் மர்மங்களும் அதை நாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதும் தான் கதை.. கதாநாயகன் தேர்வு நடைபெற்று கொண்டிருக்குறது. கதாநாயகியாக ககனா நடிக்கிறார்.
மர்ம கதைகளுக்கு பெயர்போன எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தான் இந்த தொடருக்கு கதை எழுதியுள்ளார். சரவணக்குமார் ஒளிப்பதிவை கவனிக்க விவேக் சங்கர் வசனம் எழுதுகிறார்.
இங்கே வழக்கமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்த விரும்பாததால் இந்த தொடரின் படப்பிடிப்பு முழுதும் கர்நாடகாவில் உள்ள வனப்பகுதியில் தான் நடைபெறுகிறது. கதைக்கேற்ற கிராமமும் கோவிலும் அந்தப்பகுதியிலே கிடைத்தது அதிர்ஷ்டம் என்கிறார் இயக்குனர் ஹரீஷ் ஆதித்யா.. வரும் செப்டம்பர் முதல் ஜெயா டிவியில் இந்த தொடரை சின்னத்திரையில் கண்டுகளிக்க தயாராகுங்கள்…