மணியார் குடும்பம் – விமர்சனம்


தனது மகன் உமாபதிக்காக நடிகர் தம்பி ராமையா தானே களமிறங்கி இயக்கியுள்ள படம் தான் ‘மணியார் குடும்பம்’. கிராமத்தில் வாழ்ந்து கெட்ட மணியார் குடும்பத்தை சேர்ந்தவர் தான் தம்பிராமையா. இருக்கும் சொத்தையெல்லாம் விற்று தின்பதிலும், கேட்டவருக்கு வாரி வழங்குவதிலும் அழித்துவரும் தம்பிராமையா ஒரே மகன் உமாபதியையும் பொறுப்பில்லாமல் வளர்க்கிறார்.

இந்தநிலையில் தனது மகனுக்காக தனது தங்கை மகள் மிருதுளா முரளியை மச்சான் ஜெய்பிரகாஷிடம் பெண் கேட்டுப்போக, அவரோ இவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார். சொந்தமாக தொழில் தொடங்கி மாமன் மகளை திருமணம் செய்யலாம் என திட்டமிட்டு நாயகன் உமாபதி ஒரு நிலத்தை தயார் செய்ய, வில்லனாக குறுக்கிடுகிறார் பவன்..

அவரை போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனியின் உதவியுடன் அதட்டி வைத்துவிட்டு, தொழில் தொடங்க ஊர் மக்கள் பங்காக ஒரு கோடி ரூபாயை வசூலித்து, அதை வங்கியில் செலுத்த கிளம்புகிறார்கள் அப்பாவும் மகனும். கால்டாக்சி டிரைவராக வரும் மொட்ட ராஜேந்திரன் இவர்கள் இருவரையும் சாமர்த்தியமாக ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்து எஸ்கேப் ஆகிறார். இதை நம்பாத ஊர்மக்கள், பணத்திற்கு கெடு வைத்து, தம்பிராமையா குடும்பத்தை வீட்டுச்சிறையில் வைக்கின்றனர்.

இழந்த பணத்தை மீட்பதாக சபதம் செய்து மாமன் விவேக் பிரசன்னாவுடன் கிளம்புகிறார் உமாபதி. பணத்தை இவர்களிடம் இருந்து அபேஸ் செய்தது யார்..? அந்த பணத்தை மீட்டாரா..? மாமன் மகளை கைப்பிடித்தாரா என்பது மீதிக்கதை.

நாயகன் உமாபதி கதைக்குள் கேரக்டராக தன்னை நன்றாக பொருத்திக்கொண்டுள்ளார்.. அதில் ஒன்றும் குறைசொல்வதற்கு இல்லை.. ஆனால் அவரது கேரக்டரை ஆஹா என வியந்து பார்க்கும்படி ஒரு காட்சி கூட இல்லையே என்பதையும் சொல்லியே ஆகவேண்டும். தன்னம்பிக்கை தரும் கேரக்டரில் நாயகியாக வரும் மிருதுளா முரளி இந்த கதைக்கு தான் ஓகே என சொல்லவைக்கிறார். முரட்டுக்குத்து-பிக்பாஸ் புகழ் யாஷிகா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுவிட்டு நம்மை ஏங்கவைத்துவிட்டு போகிறார்..

அநியாயத்துக்கு இப்படி நல்லவனா இருக்கிறாரே என்றோ இல்லை இவ்வளவு முட்டாளாகவா ஒருத்தன் இருப்பான் என்றோ இரண்டுவிதமாக நம்மை யோசிக்கவைக்கும் கேரக்டரில் தம்பிராமையா. இதுவரை அவர் பண்ணிய சில கேரக்டர்களின் அப்டேட் வெர்ஷன் இது. ராதாரவியின் ‘ஏதாவது உதவி வேணும்னா’ கேளுங்க காமெடி செம கலாட்டா.. அட சைடு வில்லனாகவே பார்த்துவந்த விவேக் பிரசன்னாவை இப்படி குணச்சித்திரமாக மாற்றி ஆச்சர்யப்பட வைத்துவிட்டார்களே..

‘செல்லக்கிளி’யாக வரும் மொட்ட ராஜேந்திரனை சிரமப்பட்டு காமெடி பண்ண வைத்திருக்கிறார்கள். ஒரே காட்சியில் தனது நேர்மையாளர் பிராண்டுடன் வந்து போகிறார் சமுத்திரக்கனி. ஜெயபிரகாஷ் கேரக்டரில் டிவிஸ்ட் வைத்தது ஓகே.. ஆனால் உன்னை கல்யாணம் பண்ணியதையே அசிங்கமா நினைக்கிறன் என மனைவியிடம் வசனம் பேசும் அவர், க்ளைமாக்சில் தான் எந்த நிலையில் அவரை திருமணம் செய்தேன் என உண்மையை கூறும்போது லாஜிக் இடிக்கிறதே.

உமாபதியின் நடனத்தை வெளிப்படுத்துவதற்காகவே அவ்வப்போது பாடல்கள் வந்துபோகின்றன. இயக்குனர் தம்பிராமையா. அவர் மகனை ஒரு கதாநாயகனாக நிலைநிறுத்தும் படம் என்பதால் இன்னும் கொஞ்சம் நன்றாகவே யோசித்திருக்கலாம். அப்பன், பாட்டன் சொத்தை வைத்து உட்கார்ந்து தின்னாதீர்கள்.. சொந்தமாக உழையுங்கள் என ஒரு மெசேஜுடன் இப்படி ஒரு குடும்பம் இருக்குமா எனும் வகையில் இந்த ‘மணியார் குடும்பத்தை’ வடிவமைத்திருக்கிறார் தம்பிராமையா.