பெண் கொடுமைக்கு எதிரான படம் ‘தமிழனானேன்.க’!

அண்மையில் மெரினாவில் நடந்து முடிந்த தமிழ் இளைஞர்களின் ‘தைப்புரட்சி’ பாரம்பரியத்தை மீட்டு எடுக்கும் அவர்களின் எழுச்சியை உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறது..

அந்தக் காலத் தமிழர்கள் பகை முடிக்கும் வீரத்திலும் பாசம் காட்டும் ஈரத்திலும் சிறந்து விளங்கினார்கள்.
ஆனால் இன்று தமிழர்களிடம் ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லாத நிலை உள்ளது.

தமிழனின் தவறான மனப்போக்கால் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன.
இப்போது நிலவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதித்தமிழன் எதிர் கொண்டால் எப்படிக் கையாள்வான்? தீர்வு காண எப்படி நடந்து கொள்வான்? என்பதைப் பேசும் படம் தான் ‘தமிழனானேன்.க ‘ .

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன்.

கோவைக்காரரான இவருக்கு உலக தற்காப்புக் கலைகளில் ஆர்வம் . குறிப்பாக ஒரு காலத்தில் புகழ் பெற்று இருந்து பிற்காலத்தில் காணாமல் போய் விட்ட ஆதித்தமிழனின் தற்காப்புக் கலைகள் மீது தனி ஈடுபாடு உண்டு.

அது தொடர்பான தேடலில் இறங்கிய இவருக்கு ‘அவதார் ‘ ,’அயர்ன் மேன்’ ‘. ஹாரி பாட்டர் ‘ போன்ற ஹாலிவுட் படங்களில் அனிமேட்டராக பணிபுரிந்த சாமி மாண்ட்ரேக் பெசி போன்ற வெளிநாட்டு சினிமா கலைஞர்களின் நட்பு கிடைத்து இருக்கிறது.

அவர்கள் மூலம் சினிமாவில் ஆர்வம் வந்த இவருக்கு , ஆதித் தமிழனின் தற்காப்புக் கலையை மையமாக வைத்து நாம் ஏன் ஒரு திரைப்படம் எடுக்கக் கூடாது என்கிற எண்ணம் வரவே அது விரிவடைந்து ‘தமிழனானேன்.க ‘ படமாக வளர்ந்து நிற்கிறது. ஒரு எம்.பி.ஏ பட்டதாரியான இவர் சினிமா மீதுள்ள காதலில் இப்படி ஒரு முழுப்படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்.

இப்படத்தில் ஆதித் தமிழரின் தற்காப்புக் கலைகளான சிலம்பம் , குத்து வரிசை, வர்மம் , பிடி வரிசை
போன்றவை மட்டுமல்ல குங்பூ, கராத்தே போன்ற உலகின் சிறந்த 8 தற்காப்புக்கலைகளும் காட்டப்பட்டுள்ளன .

இப்படத்தில் சதீஷ் ராமகிருஷ்ணன் , வந்தனா வரதராஜன். சரவணன் ராதாகிருஷ்ணன் , பிரித்தா, திருலோகசந்தர், வெங்கட் , அத்விக், ஷக்தி , ஜான் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஹாலிவுட் அனிமேட்டர் சாமி மாண்ட்ரேக் பெசி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல அவர் படத்திற்கு ஹாலிவுட் தொழில் நுட்பப் பணி ஒத்துழைப்பையும் வழங்கி யிருக்கிறார்.

படத்திற்கு ஒளிப்பதிவு – விக்னேஷ் அருண் , ரகு ராமையா, இசை – வினோத் சுப்ரமணியம் , தயாரிப்பு _ வெற்றித்தமிழ் உருவாக்கம் .

படம் பற்றி இயக்குநர் சதிஷ் ராமகிருஷ்ணன் பேசும்போது, “இது தொலைந்து போன நம் பாரம்பரியங்களைத் தேடும் கதை. மறைந்து போன நம் வீரக் கலைகளைத் தேடும் கதை.
நம் ஆதி கலைகளைத் தேடுகிற படமாக இருந்தாலும் நவீன ஹாலிவுட் தொழில் நுட்பங்கள் படத்தில் பயன் படுத்தப் பட்டுள்ளன.

படம் மூன்று வித அடுக்காக இருக்கும்.
முதல் அடுக்கு என்பது இப்படத்தை ஒரு சாதாரண பார்வையில் பார்த்தால் ஒரு சாதாரண மசாலாப்படம் போலத் தெரியும்.

இன்னொரு அடுக்கு என்பது ஒவ்வொரு காட்சியும் ஷாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும். ஒரு காட்சியைத் தவற விட்டாலும் படம் புரியாது.

மற்றொரு அடுக்கினை நோக்கினால் படத்தில் இருக்கும் தத்துவார்த்தக் கருத்துகள் தெரிய வரும்.

படத்தில் வரும் சண்டைக் காட்சிகளுக்கு யாருக்கும் டூப் போடப்படவில்லை . கயிறுகள் , பஞ்சு மூட்டைகள் பயன்படுத்தப்படவில்லை. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலையும் காட்டவில்லை. எல்லாமே அசல் காட்சிகள் தான். “என்கிறார்.

நதி மூலம் தேடும் முயற்சியாக உருவாகியுள்ள ‘தமிழனானேன்.க ‘ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.