‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு

நெப்போலியன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய டெல் கே. கணேசன், தற்போது யோகி பாபுவை அவரது புதிய படத்தில் நடிக்க வைக்கிறார்

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட‌ டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் தடைகளைத் தகர்த்து இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக‌ உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு மற்றும் ஹாலிவுட் இடையே ஒரு கலாச்சாரப் பாலத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

கணேசனின் முயற்சிகள் சர்வதேச அரங்கில் இந்திய திறமைகளை தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்ற‌ன. பிரபல தமிழ் நடிகர் நெப்போலியனை ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய அவர், புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரையும் ஹாலிவுட்டிற்கு தனது திரைப்படங்கள் மூலம் அழைத்து சென்றார்.

அவரது அடுத்த படைப்பான‌ ‘டிராப் சிட்டி’யில், தமிழ் நகைச்சுவை நட்சத்திரம் யோகி பாபுவை இதுவரை கண்டிராத பாத்திரத்தில் ஹாலிவுட்டுக்கு கணேசன் அறிமுகப்படுத்துகிறார். இதில் யோகி பாபு ஆங்கில ராப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடும் ஒரு தனித்துவமான காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும். தமிழ்த் திறமைகளின் பெருமையை பரப்புவதற்கும் கலாச்சாரக் கதை சொல்லலை வளர்த்தெடுப்பதற்குமான‌ டெல் கே.கணேசனின் அர்ப்பணிப்பை இந்த முயற்சிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

டெல் கணேசன் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அடி எடுத்து வைக்கும் ‘ட்ராப் சிட்டி’ படத்தில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே “ஜீஸி” ஜென்கின்ஸ், யோகி பாபு, நெப்போலியன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசைத்துறையின் பின்னணியில் நல்லதொரு கருத்தை சொல்லும் படமாக இது உருவாகி வருகிறது.

சவாலான இசை துறையில் ஒரு இளம் கலைஞனின் போராட்டத்தை திரைப்படம் காட்டுகிறது. அழுத்தமான கதைசொல்லல் மற்றும் தேர்ந்த நடிகர்களின் பங்களிப்போடு உருவாகி வரும் ‘ட்ராப் சிட்டி’ பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

லியாம் நீசனின் தி மார்க்ஸ்மேனை இந்திய பார்வையாளர்களிடம் கொண்டு சென்றதில் டெல் கணேசன் முக்கிய பங்கு வகித்தார். இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு-டப்பிங் பதிப்புகளில் 700+ திரைகளில் பரவலாக வெளியிடப்பட்டு, பிராந்திய சந்தைகளுக்கான அணுகலை உறுதி செய்கிறது.

திருச்சியில் ஜூன் 11, 1967ல் பிறந்த டெல் கே.கணேசன், YWCA பள்ளியிலும், செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியிலும் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். அமெரிக்கா செல்வதற்கு முன், சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் உள்ள‌ வேய்ன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதுகலைப் பட்டத்தையும், மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஸ்டீபன் எம். ராஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எக்ஸிகியூட்டிவ் எம்பிஏவையும் முடித்தார்.

கிரைஸ்லர் நிறுவனத்தில் வெற்றிகரமாக‌ பணியாற்றிய‌ டெல் கணேசன், மிச்சிகனை தலைமையிடமாகக் கொண்ட கைபா இன்க் நிறுவனத்தை நிறவினார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற கைபா, கணேசன் தலைமையின் கீழ், கைபா பிலிம்ஸ் மூலம் திரைப்பட தயாரிப்பு உட்பட பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளது.