போலீஸ் பற்றி மாறுபட்ட கோணத்தில் அணுகும் படம்தான் ‘தற்காப்பு’. இப்படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.பி.ரவி. கினெடாஸ்கோப் நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரித்துள்ளார்கள்.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் நடிகர் கார்த்தி பாடல்களை வெளியிட ஜெயம்ரவி பெற்றுக்கொண்டார். ட்ரெய்லரை இயக்குநர் மிஷ்கின் வெளியிட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெற்றுக் கொண்டார்.
நடிகர் ஜெயம் ரவி பேசும் போது, “என் பழைய நண்பர்களில் சக்தியும் ஒருவர். என் அப்பாவும் சுலபமாகப் பாராட்டமாட்டார். நடிக்கும்போது சுற்றிலும் இருக்கிற 40 பேரை மனதில் வைத்து நடிக்காதே தியேட்டரில் இருக்கிற பல கோடி பேருக்காக நடி என்பார்.
என் படங்களைப் பார்த்து விட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று குறையாகவே சொல்வார்.
சரியில்லாத எல்லாவற்றையும் தூக்கிவிடலாம் என்பார்.அப்போ எது சரின்னாவது சொல்லுங்கப்பா என்பேன்.
அதற்கு அவர் கெட்டதை எல்லாம் எடுத்து விட்டால் மீதி எல்லாம் நல்லதுதானே என்பார். ‘தற்காப்பு’ நல்ல தலைப்பு. நிறைய பேர் தற்காப்புக்காகப் படம் எடுக்கிறார்கள். நாலு பாட்டு, நாலு பைட்டு கதை சுமாரா இருந்தால் போதும் என்று நிறைய பேர் தற்காப்புக்காகப் படம் எடுக்கிறார்கள். அப்படித் தற்காப்புக்காகப் படம் எடுக்காதீர்கள். நானும் அப்படித் தற்காப்புக்காக சில படங்கள் நடித்திருக்கிறேன்.
சினிமா பொழுது போக்கும் இல்லை. கலையும் இல்லை. பார்ப்பவரை கட்டிப் போட வேண்டும் சினிமா அது போதும். நான் நடிக்க 3 ஆண்டுகள் எடுத்த படம்’தனி ஒருவன்’ . அப்போது என்ன கேப் சார் 3 ஆண்டுகள் படமே இல்லை என்றார்கள். இந்த ஒரே ஆண்டு 3 படம் கொடுத்தேன். என்ன சார் இந்த ஒரே ஆண்டு 3 படம் என்கிறார்கள். மற்றவர் பேசுவதைப் பற்றி கவலைப்படாமல் உழைக்க வேண்டும் பலன் நிச்சயம் உண்டு. உதாரணம் என் ‘தனி ஒருவன் ‘வெற்றி ” என்றார்.