A-1 விமர்சனம்


சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் இது.

நேர்மையான அதிகாரி ஒருவரின் மகள் தான் தாரா. தனது அத்தை ஷோபனா ரவுடியான ரஜினியை காதலித்தது போல (தளபதி படத்தை அழகாக கோர்த்துள்ளார்கள்) தானும் ஒரு ரவுடியை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறார். அதேசமயம் தனது அத்தையின் காதல் ஜாதியால் நிராகரிக்கப்பட்டது போல காதலுக்கு ஜாதி தடையாக இருக்கக்கூடாது என்பதால் அந்த ரவுடி தன்னுடைய சாதியைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்.

அதற்கேற்றார்போல் தன்னை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றும் சந்தானத்தின் மீது பார்த்ததுமே காதல் கொள்கிறார் தாரா… ஆனால் பின்னர் தான் அவர் வேறு ஜாதி என்று தெரியவருகிறது. இருந்தாலும் சந்தானம் தாராவை பெண்கேட்டு செல்ல, தாராவின் அப்பா மறுத்துவிடுகிறார்.. தாராவின் அப்பா உயிரோடு இருக்கும் வரை தனக்கு தாரா கிடைக்க மாட்டார் என்பதால் குடிபோதையில் அவரைக் கொல்ல திட்டமிடுகிறார் சந்தானம். ஆனால் விடிந்து எழுந்து பார்த்தால் அவரது நண்பர்கள் தாராவின் அப்பாவை தாங்கள் விஷம் ஊற்றி கொலை செய்துவிட்டதாக கூறி சந்தானத்திற்கு அதிர்ச்சி அளிக்கிறார்கள்.

இந்த நிலையில் தாரா அப்பாவின் இறுதி சடங்கில் நண்பர்களுடன் சந்தானம் கலந்து கொள்கிறார். நண்பர்கள் தாரா அப்பாவை கொலை செய்த காட்சியும் சந்தானத்துடன் சேர்ந்து அவர்கள் அவரது உடலை எடுத்துச் செல்லும் காட்சியும் வீடியோவாக மர்ம நபர் ஒருவரால் சந்தானத்திற்கு அனுப்பப்பட்டு பணம் கேட்டு மிரட்டப்படுகிறார்.. அந்த வீடியோவை அனுப்பியது யார்..? காதலியின் முன் சந்தானம் மற்றும் நண்பர்களின் குட்டு உடைந்ததா..? அதன்பின் சந்தானத்தின் கதி என்ன என்பது மீதிக்கதை

டைட்டிலை பார்த்ததும் சந்தானம் ஆரம்பத்திலிருந்து மிகப் பெரிய ரவுடியாக, ஜெயில் பறவையாக இருப்பார் என்று நினைத்து போனால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது வழக்கம் போல ஜாலியாக கலகலப்பான பேர்வழியாக இருக்கும் சந்தானம் எப்படி அக்யூஸ்ட் நம்பர் ஒன்னாக மாறுகிறார் என்பது தான் கதை.. சண்டைக் காட்சிகளை குறைத்து காதல் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார் சந்தானம்.. முந்தைய படங்களை விட நகைச்சுவை குறைந்து வருவதை சந்தானம் சற்று கவனிக்க வேண்டும்.

நாயகியாக அறிமுகம் தாரா அலிஷா பெர்ரி. சந்தானத்திற்கு ஜாடிக்கேத்த மூடியாக செட்டாகியுள்ளார். பார்ப்பதற்கு களையாகவும் இருப்பதோடு கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார்.

சந்தானத்தின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் வடசென்னை பாஷையுடன் வழக்கம்போல செம அலம்பல் செய்கிறார். தாராவின் அப்பாவாக யாட்டின் கார்கேயர் யார் இந்த மனிதர் என்று கேட்க வைக்கிறார்.. இடைவேளைக்கு பிறகு என்ட்ரி ஆனாலும் மொட்டை ராஜேந்திரனும் அவர் பார்க்கும் தொழிலும் நம்மை மறந்து ரசிக்க வைக்கின்றன.. குறிப்பாக அந்த ஹார்ட் டிஸ்க் காமெடி எல்லோராலும் ரசிக்கப்படும்.. மிகப்பெரிய அதிரடி ஹீரோவாக வில்லனாக நடித்த நடிகர் சாய்குமாரை இப்படி சாதாரணமாக டம்மியான கேரக்டரில் பார்ப்பது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

சந்தானத்தின் டீமில் மாறன், தங்கதுரை. கிங்ஸ்லி ஆகியோர் தங்களால் இயன்றவரை பத்துக்கு மூன்று இடங்களில் காமெடிகள் கலகலக்க வைக்கிறார்கள். லொள்ளு சபா மனோகரும் சில இடங்களில் கை கொடுக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ பாடல் பல நாட்களுக்கு நம் மனதில் ஹம்மிங் ஆக ஓடிக்கொண்டே இருக்கும். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு குறிப்பாக இடைவேளைக்கு பின்னர் வெகு நேர்த்தி.

ஆரம்பத்தில் சுவாரசியம் எடுக்கும் கதை போகப்போக குறுகலான பாதையில் பயணித்து இடைவேளையில் ஒரு முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டு நின்றது போல் ஒரு உணர்வே நமக்கு ஏற்படுகிறது. இருந்தாலும் இடைவேளைக்கு பின்பு குறிப்பாக மொட்ட ராஜேந்திரன் என்ட்ரிக்கு பிறகு திரைக்கதையை வேறு திசையில் திருப்பி ஓரளவு அழகாக சமாளித்திருக்கிறார் இயக்குநர் ஜான்சன். சந்தானம் ஹீரோவாக மாறிவிட்டதால் தனக்கு பக்கபலமாக இன்னும் சில முக்கிய நகைச்சுவை நடிகர்களை இணைத்துக் கொண்டால் அது அவருக்கு பக்கபலமாக இருக்கும் என்பதுதான் இந்த படத்தை பார்த்ததும் நமக்கு சொல்லத் தோன்றுகிறது