லொள்ளு சபா ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் இந்த ஆரம்பமே அட்டகாசம்’ படம்..
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன், அவரது மனைவி ஸ்ரீ ரஞ்சனி.. இவர்களது மகன் (லொள்ளு சபா)ஜீவா.. ஒரு காலத்தில் தனது காதல் கைகூடாமல் போனதால், தனது மகனாவது காதல் திருமணம் செய்யட்டும் என ஊக்கப்படுத்துகிறார் பாண்டியராஜன்.. அதற்கேற்ற மாதிரி ஜீவாவுக்கு சங்கீதா பட் மீது காதல் வர, ஒருவழியாக காதலுக்கு பச்சைக்கொடியும் காட்டுகிறார் சங்கீதா.
குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் ஜீவா, கடன் வாங்கியாவது செலவு செய்து சங்கீதாவை திருப்திப்படுத்துகிறார்.. ஒரு ட்ரெய்னிங் விஷயமாக ஆந்திரா செல்லும் ஜீவா, அங்கிருந்து சங்கீதாவுடன் பேச முயற்சிக்க, அவரது செல் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கிறது.. ஊருக்கு திரும்பி வந்தால் சங்கீதா வேறு வீடு மாறிப்போன விபரம் தெரிய வருகிறது..
ஏதேச்சையாக ஒருநாள் சங்கீதாவை சந்திக்க, அவரோ தனது காதல் விவரம் தனது வீட்டிற்கு தெரிந்ததால் சிக்கலாகி விட்டது என காரணம் கூறுகிறார். ஜீவா சமாதானமானாலும், அவரது நண்பர்கள், சங்கீதா வேறு ஒரு பணக்கார வாலிபனை காதலிப்பதை கண்டுபிடித்து ஜீவாவிடம் சொல்கின்றனர்..
சங்கீதாவும் ஒரு கட்டத்தில் தான் அந்த பணக்கார இளைஞனைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக ஜீவாவுக்கு அதிர்ச்சி தருகிறார். இந்த நிலையில் ஜீவா ஒரு வித்தியாசமான முடிவை எடுக்கிறார்.. அது என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமோ..? உடனே ‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்திற்கு கிளம்புங்கள்..
ஜீவாவுக்கு ஏற்ற கச்சிதமான கேரக்டர்.. நடுத்தர வர்க்கத்து இளைஞனின் காதலையும் காதல் தோல்வியின் வலியையும், அதனால் ஏற்பட்ட கோபத்தையும் சரியாக பிரதிபலித்திருக்கிறார்.. க்ளைமாக்ஸில் அவர் செய்யும் விஷயம் உண்மையிலேயே காதலர்களை ஏமாற்றும் பெண்களுக்கு சரியான சவுக்கடி தான்.. ஜீவாவுக்கு இனி நல்ல வாய்ப்புகள் தேடிவரும் என நம்பலாம்.
கிட்டத்தட்ட வில்லி என்றும் சொல்லும் விதமாகத்தான் கதாநாயகி சங்கீதா பட்டின் கேரக்டர் அமைந்திருக்கிறது.. ஆனால் அந்த கேரக்டரை அற்புதமாக உள்வாங்கி, ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு காதலை பலிகடாவாக்கும் நடுத்தர வர்க்கத்து இளம்பெண்ணை கண் முனே நிறுத்தியுள்ளார்.. அதிலும் காதலிக்கும் நபர்களிடமெல்லாம் ‘ஐ லவ் யூ.. லவ் யூ.. தவ்சன்ட் டைம்ஸ் லவ் யூ’ என சொல்கிற இடத்தில் ஒரிஜினல் வில்லனே தோத்தான் போங்கள்..
ஜீவாவின் நண்பர்களாக வரும் சாம்ஸ், வையாபுரி மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் சில இடங்களில் (மட்டும்) படத்தை கலகப்பாக நகர்த்த உதவி இருக்கிறார்கள். சங்கீதா பட்டின் பணக்கார காதலனாக வரும் நபர் ஏதோ ஒரு விதத்தில் நம்மை கவர்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸில் தான் திருமணம் செய்யப்போகும் பெண் இப்படிப்பட்டவள் தெரிந்தும்கூட அந்த அளவுக்கு ‘மிக்சர் பார்ட்டி’யாக அவர் நிற்பது செம. பாண்டியராஜனும் ஸ்ரீ ரஞ்சனியும் யதார்த்தம் மீறிய பெற்றோராக காட்டப்படுவது சலிப்பையே தருகிறது.
ஜெய கே.தாஸின் இசையில் இரண்டு பாடல்கள் ஆட்டம் போடும் ரகம். படத்திற்கு தேவையான அளவு வேலையை திறம்பட செய்திருக்கிறது ஆனந்தின் ஒளிப்பதிவு.. காதலித்து ஏமாற்றும் பெண்களை கோர்ட்டுக்கு இழுத்து சவுக்கடி கொடுத்த ‘தேவதையை கண்டேன்’ பட பாணியில் இருந்தாலும், அந்த அளவிற்கு போகாமல் டீசன்ட்டாக, மனதை தவிர காதலியிடம் இழந்ததை எல்லாம் திரும்ப பெற நாயகன் எடுக்கும் முடிவு கைதட்ட வைக்கிறது..
அறிமுக இயக்குனர் ரங்கா காதலர்களுக்கான குறிப்பாக காதலிக்கும் ஆண்களுக்கான ஒரு எச்சரிக்கை மணியை அழகாக தனது பாணியில் அடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.