எங்க அம்மா ராணி – விமர்சனம்


மருத்துவர்களே கைவிட்ட நிலையில் நோயின் பிடியில் இருந்து மகளை காப்பாற்ற போராடும் ஒரு தாயின் பாசப்போராட்டம் ’எங்க அம்மா ராணி’..

வேலை விஷயமாக கம்போடியா நாட்டுக்கு போன கணவன் என்ன ஆனான் என தெரியாத நிலையில் மலேசியாவில் இரண்டு மகள்களுடன் சிரமப்படுகிறார் சாய் தன்ஷிகா. விசா நீட்டிப்பில் சிக்கல் ஏற்பட்டதால் விசா நீட்டிப்புக்காக வேலைக்கு செல்கிறார்.. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவரது ஒரு மகள் திடீரென இறக்கிறாள்.. எளிதில் குணமாகாத திடீரென தாக்கும் நோய் அவளுக்கு இருந்ததும் அடுத்ததாக இன்னொரு குழந்தைக்கும் இருப்பதும் தெரிய வருகிறது.

மற்றொரு மகளை பாதுகாக்க மருத்துவரின் ஆலோசனைப்படி குளிர் பிரதேசம் சென்று தங்குகிறார்.. அங்கு மகளை ஒரு ஆவி பிடிக்கிறது.. ஆனால் அதேசமயம் மகளின் நோய் குணமாகிறது.. ஆவியை விரட்ட முயற்சிக்கும் சாய் தன்ஷிகாவுக்கு அந்த ஆவிதான் தனது குழந்தைக்கு மருந்து என்கிற யதார்த்தம் புலப்படுகிறது. ஆனால் ஆவியோ வந்த வேலை முடிந்ததும் கிளம்பிவிடும்.. இந்தநிலையில் சாய் தன்ஷிகா என்ன முடிவெடுத்தார் என்பதை நெஞ்சம் கனக்க சொல்லியிருக்கிறார்கள்.

படம் முழுவதும் ஒரு பாசமுள்ள அம்மாவின் போராட்டத்தை கண்முன் நிறுத்துகிறார் சாய் தன்ஷிகா. க்ளைமாக்ஸில் குழந்தையை காப்பாற்ற அவர் எடுக்கும் முடிவு ஏற்புடையது இல்லை என்றாலும் அதீத பாசத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது.

டிவின்ஸ் குழந்தைகளாக நடித்துள்ள வர்ணிகா மற்றும் வர்ஷா தங்களது துறுதுறு நடிப்பால் நம் மனதை கொள்ளையடிக்கிறார்கள். டாக்டராக வரும் சங்கர் ஸ்ரீஹரி முக்கியமான கேரக்டரில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டிபார்ட்மென்ட் ஸ்டோர் முதலாளியாக வரும் நமோ நாராயணன், வில்லனாக அனில் முரளி, சீப் டாக்டராக நடித்துள்ள ரியாஸ் அஹமது, குழந்தைக்கு டியூசன் சொல்லி கொடுக்கும் சீன மாஸ்டர் என மற்ற கதாபாத்திரங்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்..

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை நெஞ்சம் கனக்க செய்து விடுகிறது.. இரண்டு பாடல்களும் அம்மாவின் மேன்மையை சொல்லும் பாடல்கள் என்பதில் சந்தேகமே இல்லை. குமரன் மற்றும் சந்தோஷ் குமார் இருவரின் ஒளிப்பதிவில் மலேசியாவின் இன்னொரு யதார்த்த முகத்தை பார்க்க முடிகிறது..

தாயின் பாசத்துக்கு அளவீடு கிடையாது.. அது தனது குழந்தையின் உயிரை காக்க எந்த எல்லைக்கும் செல்லும் என்கிற ஒன்லைனை வைத்து சென்டிமென்ட்டாக நம்மை கட்டிப்போட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பாணி.. மிகவும் நேர்த்தியாக சென்று கொண்டிருக்கும் திரைக்கதை, ஆவி, தன்ஷிகா எடுக்கும் முடிவு என க்ளைமாக்ஸில் தடுமாறியிருக்கிறது.. ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுதான் என்றாலும் இது ஒரு நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை.