உணவுப் பாதுகாப்புத்துறையில் அதிகாரியாக இருக்கும் நாயகன் சித்தார்த் மிகவும் கண்டிப்பானவர். உணவில் கலப்படம் செய்யும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தருகிறார்.
அதே ஊரில் நாயகி கேத்ரின் தெரசா ஒரு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு வித்தியாசமான வியாதி இருக்கிறது. இவருக்கு நுகர்வு சக்தி கிடையாது. இதனால் ஒரு விபத்தில் நாயகி கேத்ரின் தெரசா தனது தாயை இழக்கிறார்.
ஆசிரியராகப் பணியாற்றும் கேத்ரின் தெரசா சமூக சேவையும் செய்கிறார். இதனால் சித்தார்த், நாயகியை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில் உணவில் கலப்படம் செய்யும் கபீர் சிங், மதுசூதனன், கந்தகுமார், சில்வா ஆகியோர் கண்டிப்பான அதிகாரியான சித்தார்த்தின் செயலால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் இவர்கள் நாயகன் சித்தார்த்தை கொன்று விடுகின்றனர். இறந்த சித்தார்த், ஆவியாக வந்து காதலி கேத்ரின் தெரசா மூலமாக பழி வாங்குகிறார்.
ஒரு ஈ, எறும்பைக் கூட கொல்ல கூடாது என்று குறிக்கோளுடன் இருக்கும் கேத்ரின் தெரசா, வில்லன்களை எப்படி பழி வாங்கினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
தனது கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் நாயகன் சித்தார்த். கண்டிப்பும், நேர்மையுமாக அவருடைய கதாபாத்திரம் பளிச்சிடுகிறது. இறந்த பிறகு ஆவியாக வரும் சித்தார்த் அவ்வளவாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.
முதல் பாதி முழுக்க நாயகி கேத்ரின் தெரசா மனதை ஈர்க்கிறார். ஆசிரியராகவும், சமூக சேவகியாகவும் நம்முடைய மனதில் பதிந்து விடுகிறார். ஆனால் வில்லன்களை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் கொஞ்சம் திணறுகிறார்.
காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார் சதீஷ். குறைந்தளவே பேசி ரசிக்க வைத்திருக்கிறார்.
கபீர் சிங் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். மதுசூதனன், கந்தகுமார், சில்வா, ஆடுகளம் நரேன் ஆகியோர் அவரவருக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
உணவில் கலப்படம் செய்வது மிகப்பெரிய தவறு என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சாய் சேகர். சிகரெட் பிடிப்பது கேடு என்று சொல்வதை போல, உணவில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால், நாளடையில் பிஸ்கெட் சாப்பிட்டால் கேடு, அரிசி சாப்பிட்டால் கேடு என்ற நிலைமைக்கு சென்று விடுவோம் என்பதை சொல்லிய இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். இந்த கருத்துக்கு சித்தார்த் உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
தமன் இசையில் பாடல்கள் ஓரளவு ரசிக்கும் ரகம். ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட்.
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அருவம் படத்தின் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.