அசுரவதம் – விமர்சனம்


சசிகுமார் நடிப்பில் மருது பாண்டியன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அசுரவதம். வழக்கமான சசிகுமார் பாணியில் படம் இருக்கிறதா, இல்லை புது மாதிரியா இது அமைந்து இருக்கிறதா என்று பார்க்கலாம்.

கிராமத்தில் கடை வைத்திருக்கும் வசுமித்ராவை சசிகுமார் அடிக்கடி பயமுறுத்தி வருகிறார், மிரட்டுகிறார், விரட்டுகிறார். ஆனால் என்ன காரணம் என்று அறியாமல் குழம்பி போய் இருக்கிறார் வசுமித்ரா. இடைவேளைக்கு பிறகுதான் வசுமித்ராவுக்கும் சசிகுமாருக்கும் என்ன முன்விரோதம் என்று ஒரு கொடுமையான பிளாஷ்பேக் காட்டப்படுகிறது. எதற்காக சசிகுமார் வசுமித்ராவை அப்படி மிரட்டுகிறார், யாரை வதம் செய்கிறார் என்பது க்ளைமேக்ஸ்.

சசிகுமார் என்றாலே பக்கம் பக்கமாக வசனம் பேசுவார் என்று நமக்கு தெரியும். இந்த படத்தில் அவருடைய வசனமே ஒரு பக்கத்திலே அடங்கிவிடுகிறது.. அந்தளவுக்கு பெரும்பாலும் காட்சிகளிலேயே படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மருது பாண்டியன். சொல்லப்போனால் சசிகுமாருக்கு இதில் வேலை குறைவுதான் என்று சொல்லலாம்.

பிளாஸ்ஷ்பேக்கில் கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் வலியை ஏற்படுத்தும் நடிப்பை வழங்கி இருக்கிறார் நந்திதா. படத்தின் வில்லனாக நடித்திருக்கும் வசுமித்ரா, கோபம், ஆத்திரம், பயம்,சந்தேகம், என பலவிதமான கலவையான உணர்வுகளை நடிப்பில் வெளிக்காட்டி இருக்கிறார். கொஞ்சம் ஒவர்டோஸ் என்றாலும் பரவாயில்லை என்று சொல்லலாம். அவருக்கு உதவி செய்பவராக வரும் ராஜசிம்மன், மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி,நமோ நாராயணன், தங்களது இருப்பை அழுத்தமாக தக்கவைத்து இருக்கிறார்கள் . சசிகுமாரின் மகளாக வரும் பவித்ராவும் நம் கவனத்தை கவருகிறார்.

சண்டைக் காட்சிகளில் அதிரவைக்கிறார் சண்டை வடிவமைப்பாளர் திலீப் சுப்பராயன். காட்ச்சிகளுக்கு ஏற்ப விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது.எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு. வசனத்தை குறைக்கவேண்டியதுதான்.. அதற்காக இவ்வளவு குறைத்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. .தவிர இதில் புதியபாணி சசிகுமார் என்றாலும் நாடோடிகள் சசிகுமாரை தவிர்த்து மனம் வேறு எதையும் எதிர்பார்க்க மறுக்கிறது. அசுரவாதம் என்கிற பெயரில் வில்லனுடன் நம்மையும் சேர்த்து வதம் பண்ணியிருக்கிறார் இயக்குனர்.