தில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்


வெற்றிபெற்ற ‘தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தப்படம்..
சென்னையில் இருக்கும் சந்தானமும் அவரது மாமா மொட்டை ராஜேந்திரனும் அடிக்கும் லூட்டிகளால் அவர்கள் ஏரியாவே மிரள்கிறது இதனால் பாதிக்கப்படும் ஒரு டாக்டர் தன்னிடம் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை வைத்து சந்தானத்தை காதல் வலையில் வீழ்த்துகிறார்

இதைத்தொடர்ந்து கதை அப்படியே கேரளாவுக்கு நகர்கிறது கேரளாவில் உள்ள மிகப் பெரிய மந்திரவாதி ஒருவரின் மகள் தான் அந்த பெண் என்பது சந்தானத்துக்கு தெரியவர அதன் பிறகு நடக்கும் பேய் பங்களா, மாயாஜால வித்தைகள் இவைதான் மீதி படம்.

இதுபோல இன்னும் இரண்டு படம் எடுத்தால் போதும், தமிழ்நாட்டில் பேய் மீது ஜனங்களுக்கு உள்ள பயம் அனைத்தையும் சுத்தமாக துடைத்து எறிந்து விடுவார் சந்தானம். அந்த அளவுக்கு பேய்களே கதறும் விதமாக கலாய்த்து தோரணம் கட்டி தொங்க விட்டுள்ளார் சந்தானம்.

நீண்ட நாள் கழித்து மொட்ட ராஜேந்திரன் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைப்பததற்கு உத்தரவாதம் தருகிறார். மிகத்திட்டமிட்டு காய் நகர்த்தினால் இவர்கள் இருவரும் மிகப் பெரிய காமெடி கூட்டணியாக உருவாக வாய்ப்பு இருக்கிறது.. சந்தானம் கவனிப்பாராக.

கேரளத்து பைங்கிளி ஸ்ரீதா சிவதாஸ் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார். இடைவேளைக்குப்பின் ஊர்வசி என்ட்ரி கொடுத்ததும் கலகலப்பின் சதவீதம் கூடுவது உண்மைதான்

லாஜிக், ஆங்காங்கே விழும் திரைக்கதை ஓட்டை என சின்ன சின்ன குறைகள் எதையும் கவனிக்க விடாமல் காமெடியால் கட்டிப்போட்டு விடுகிறார்கள் சந்தானம் அன் கோ.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் கலகலப்பு சற்று ஜாஸ்தியாகவே உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்