பொதுநலன் கருதி ; விமர்சனம்


வட்டிக்கு பணம் வாங்கி வாழ்க்கையை தொலைக்கும் பலருக்கு பாடமாக இருக்குமென இந்த பொதுநலன் கருதி என்கிற படத்தை எடுத்திருப்பதாக படத்தின் இயக்குனர் சீயோன் கூறியிருந்தார் படம் எப்படி வந்திருக்கிறது பார்க்கலாம்.

வட்டித்தொழில் செய்பவர் யோக் ஜேபி. அவரிடம் அடியாளாக இருப்பவர் சந்தோஷ்.. இன்னொரு பக்கம் தனது காணாமல் போன அண்ணனை தேடிக்கொண்டே கால் டாக்சி ஓட்டி வருகிறார் டிரைவர் கருணாகரன். யோக் ஜேபிக்காக பலரையும் பகைத்துக்கொண்டு தனது உயிரை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார் சந்தோஷ்.

ஆனால் யோக் ஜேபி விசுவாசம் நம்பிக்கை இதிலெல்லாம் பற்றற்ற ஆளாக இருக்கிறார். யாருக்கும் தன்னை பற்றிய எந்த விவரமும் தெரிய கூடாது என நினைக்கிறார். இவருக்கும் எதிர்த்தரப்பு பாபு ஜெயனுக்கும் தான் வட்டித்தொழிலில் மிகப்பெரிய போட்டி.

இவர்களுக்கு உள்ள கொடுக்கல்-வாங்கலில் என்னென்ன மோதல்கள் நிகழ்கிறது..? அது சந்தோஷை எப்படி பாதிக்கிறது..? கருணாகரன் அண்ணன் என்னவானார்..? அதற்கும் இந்த வட்டி கும்பலுக்கும் என்ன சம்பந்தம் என பல கேள்விகளுக்கு மீதி படம் விடை சொல்கிறது.

எந்நேரமும் முறைப்பும் விறைப்புமாக இருக்கும் சந்தோஷ், இந்த படத்தில் கொஞ்சம் கவனம் ஈக்கிறார் ஆனால் அவரது கதாபாத்திர வடிவமைப்பு தான் பக்குவமற்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்னொரு நாயகன் ரேஞ்சுக்கு கருணாகரன்.. டூயட் இல்லாத குறை ஒன்று தான்.. அவருக்கு ஜோடியாக நடித்துள்ள அனு சித்தாரா இன்று மலையாள திரையுலகின் மிக முக்கியமான கதாநாயகி. அவரை ஓரளவு பயன்படுத்தி இருக்கிறார்கள்.. கருணாகரனின் தந்தையாக வருபவர் அநியாயத்துக்கு பொங்குவது எல்லாம் ஓவர்.

இவர்களையெல்லாம் அசால்டாக தூக்கி சாப்பிடும் கேரக்டரில் யோக் ஜேபி மனதில் நிற்கிறார். அவருக்கு எதிராக வரும் கந்துவட்டி பார்ட்டி பாபு ஜெயனும், அவரது அழுத்தமான கம்பீரம் குரலும் அவரை கவனிக்க வைக்கிறது.

ஏதோ அப்பாவி கும்பல் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும், அது சம்பந்தமாக டைட்டில் வைத்துள்ளார்கள் என படத்தை பார்த்தால் கடன் வாங்குபவர்கள் எல்லாம் லட்ச லட்சமாக வாங்கிக்கொண்டு அதைக் கட்டாமல் டிமிக்கி கொடுக்கும் நபர்களாகவே இருக்கிறார்கள். அதனால் வட்டிக் கடைக்காரர்கள் மீது கோபம் வருவதற்கு பதிலாக கடன் வாங்குபவர்கள் தான் நமக்கு கோபம் வருகிறது. அது இந்த படத்துக்கு பிளஸா அல்லது மைனஸா என்பது தெரியவில்லை.

பொதுநலன் கருதி என டைட்டில் வைக்கப்பட்டிருந்தாலும் படத்தில் பொது நலனுக்கான விஷயங்கள் என எதுவுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. திரைக்கதையை மாற்றி அமைத்து இருந்தால், இந்த அருமையான நடிகர்களை கொண்டு இந்த படத்தை இன்னும் சிறப்பாக கொண்டு சென்று இருக்கலாம்