எம்பிரான் – விமர்சனம்


கோவிலில் அர்ச்சகராக இருக்கும் மௌலியின் பேத்தி ராதிகா ப்ரீத்தி. இவர் அவ்வப்போது சில இடங்களில் டாக்டர் ரெஜித்தை பார்த்து, ஒரு தலையாக காதல் கொள்கிறார். தன் காதலை அவரிடம் தெரிவிப்பதற்காக, அவரை மருத்துவமனைக்கு சென்று பார்ப்பதற்காக வீம்பாக காய்ச்சலை வரவழைத்து கொள்கிறார் இந்த விஷயம் ஒரு கட்டத்தில் தாத்தாவிற்கு தெரியவர பேத்தியை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனை நோக்கி ஸ்கூட்டரில் செல்கிறார். வழியில் விபத்தில் சிக்கி தாத்தா மரணம் அடைய, ராதிகா பிரீத்தி கோமா நிலைக்கு செல்கிறார்.

இது எதையும் அறியாத டாக்டர் ரெஜித்துக்கு தினசரி ஒரு கனவு தொடர்ச்சியாக வந்து அவரை தூங்கவிடாமல் தொந்தரவு செய்கிறது. பின்னர் அந்தக் கனவில் தோன்றும் விஷயங்களை ஞாபகப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அந்த கனவு குறித்து ஆராய்கிறார் ரெஜித்.

அப்போதுதான் தன்னை இப்படி ஒரு பெண் ஒரு தலையாக காதலித்து இருக்கிறாள் என்றும் தற்போது அவள் சுயநினைவில்லாமல் கோமாவில் இருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. இதையடுத்து அந்த பெண்ணிற்கான தீவிர சிகிச்சையில் இறங்குகிறார் ரெஜித்.

அந்தப்பெண் மீண்டும் சுயநினைவிற்கு திரும்பினாரா..? ரெஜித் தன்னை காதலிப்பதை உணர்ந்துகொன்டாரா..? இறுதியில் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்

டாக்டராக வரும் ரெஜித் மேனனும் அலட்டல் இல்லாத ஹீரோ பில்டப், நண்பர்கள் கூட்டம், குத்துப்பாட்டு, குடி கும்மாளம், லவ் டூயட் என எந்தவித அட்ராசிடிகளும் இல்லாமல் கதைக்குள் அழகாக பயணித்திருக்கிறார்.

அதேபோல படத்தின் பாந்தமான நாயகியாக ராதிகா பிரீத்தி வழக்கமான தமிழ் சினிமா இலக்கணத்தை மாற்றி ஹீரோவை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணின் கதாபாத்திரம். அளவுகோலை மீறாத அருமையான நடிப்பு. குறிப்பாக அவர் சுய நினைவில்லாமல் கோமாவில் இருக்கும் காட்சிகளில் மிக தத்ரூபமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தாத்தாவாக மௌலி பண்பட்ட பக்குவமான நடிப்பு.. அவரைப்பற்றி சொல்லியா தெரிய வேண்டும்.. ஜமாய்த்திருக்கிறார்.. அதேபோல ரெஜித்தின் அம்மாவாக வரும் கல்யாணி நடராஜன் கதாபாத்திரமும் கதைக்கு பக்கபலமாக துணை நிற்கிறது.

மொத்தம் நான்கைந்து கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு அதற்குள் ஒரு அழகான காதல் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக ஒரு நாயகியின் பார்வையில் அவளது காதலை மையப்படுத்தி படத்தை நடத்தியிருப்பது தமிழ் சினிமாவில் எப்போதாவது நடக்கும் ஒரு அதிசயம். அதற்காக இயக்குனரை பாராட்டலாம். படத்தின் நீளம் வழக்கமான தமிழ் சினிமா படங்களின் நீளத்தை விட குறைவுதான் என்றாலும் ஒவ்வொரு காட்சியையும் நீளநீளமாக வைத்திருப்பது சற்று அலுப்பைத் தருகிறது.

அதேசமயம் கதாநாயகி சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மனதிற்கு சந்தோசத்தை தருவதையும் சொல்லி ஆகவேண்டும். திரைக்கதையில் இன்னும் சற்று விறுவிறுப்பை கூட்டி ராதிகா ப்ரீத்தியின் காதல் நிறைவேறுமா என்கிறதே ஏக்கத்தையும் தவிப்பையும் நமக்குள் புகுத்தி இருந்தால் இந்த படம் அழகான வெற்றி படமாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அறிமுக நாயகன், நாயகியை வைத்து பில்டப்பாக படம் எடுக்கிறேன் என்று ரசிகர்களை எரிச்சலூட்டி தாங்களும் மண்ணில் விழுந்த பல படங்கள் உண்டு. ஆனால் இந்த எம்பிரான் படம் ஆகா ஓகோ என சொல்ல வைக்காவிட்டாலும், படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை காட்சிகளை அழகழகாக சின்னச்சின்ன திருப்பங்களுடன் டீசன்டாக நகர்த்திச் செல்கிறார் இயக்குனர் கிருஷ்ணா பாண்டி.