வேலைவெட்டி இல்லாமல் நண்பன் அப்புக்குட்டியுடன் சுற்றும் மிதுன் ஸ்ருதி மீது காதலாகிறார். அடாவடி போலீஸ் அதிகாரி அருள்தாஸால் ஒருமுறை டார்ச்சரை அனுபவிக்கும் மிதுன், அவருக்கு பாடம் புகட்ட அவரிடமிருந்து ஒரு பேக்கை அபேஸ் செய்கிறார். அதில் வெளிநாட்டு கரன்சிகள் இருப்பது கண்டு அதிர்ந்தாலும், அதில் கொஞ்சம் மட்டுமே எடுத்துக்கொண்டு மீதியை தற்காலிகமாக தானும் அப்புக்குட்டியும் தங்கியிருக்கும் ஒரு கட்டடத்தின் ஒரு அறையில் புதைத்து வைக்கிறார்..
ஒருபக்கம் அந்தப்பணத்தை பறிகொடுத்த சேட்டும் இன்னொரு பக்கம் அவர்களிடமிருந்து சுட்டு, அதை மிதுனிடம் பறிகொடுத்த அருள்தாசும் வெறிகொண்டு தேடுகிறார்கள். இந்தநிலையில் கையில் இருந்த பணம் தீர்ந்ததும், அடுத்ததாக கொஞ்சம் பணம் எடுப்பதற்காக மீண்டும் அந்த கட்டடத்திற்கு வரும் இருவருக்கும் அங்கே புதிதாக போலீஸ் நிலையம் துவங்கப்பட்டது கண்டும் அதன் இன்ஸ்பெக்டராக அருள்தாஸ் இருப்பது கண்டும் அதிர்ச்சியாகின்றனர்.
பணம் போனால் போகட்டும் என மிதுனும் அப்புகுட்டியும் சமாதானம் ஆனாலும், பணத்தை இவர்கள் தான் அடித்தார்கள் என்பது சேட்டுக்கும் அருள்தாஸூக்கும் தெரியவருகிறது. ஸ்ருதியை பிணைக்கைதியாக்கி பணத்தை கொண்டுவர சொல்கின்றான் சேட். இந்த இக்கட்டான சூழலை மிதுனும் அப்புக்குட்டியும் எப்படியும் சமாளித்தார்களா என்பது மீதிக்கதை.
மாதவன் போல துறுதுறு தோற்றத்திலும் நடிப்பிலும் நம்மை கவர்கிறார் நாயகன் மிதுன். மம்முட்டிக்கே ஜோடியாக நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஒரு புதுமுக ஹீரோவுக்கும் ஈடுகொடுத்து நடித்துள்ளர். அப்புக்குட்டி ஹீரோவின் நண்பனாக வழக்கம்போல் வெள்ளந்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார். விஜயகாந்திற்கு அடுத்தபடியா அதிகம் போலீஸ் ட்ரெஸ் போடுவது அருள்தாஸாகத்தான் இருக்கும். சிடுசிடு முகத்துடன் அந்த கேரக்டராகவே மாறியுள்ளார்.
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பணத்தை எடுக்கும் காட்சியெல்லாம் செம சினிமாத்தனம்.. உங்களுக்கு சம்பந்தமில்லாத உங்களுக்கு உரிமையில்லாத பொருள் திடீரென உங்களை தேடிவந்தால் அதை சொந்தம் கொண்டாடாதீர்கள்.. அதில் அதிர்ஷ்டத்தை விட ஆபத்து தான் அதிகம் என பாடம் நடத்தி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபாலாஜி