காட்டுப்பய சார் இந்த காளி – விமர்சனம்


சென்னையில் அவ்வப்போது கார், பைக்குகளை தீவைத்து கொளுத்துகிறான் மர்ம மனிதன் ஒருவன்.. அவை அனைத்தும் சேட் ஒருவர் நடத்தும் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு சொந்தமானவை என்பது தெரியவருகிறது. இந்த வழக்கு அதிரடி போலீஸ் அதிகாரியான ஜெய்வந்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த வழக்கை அவர் எப்படி டீல் பண்ணுகிறார்.. சேட்டிடம் வேலைபார்க்கும் ஊழியர்கள் மட்டும் குறிவைக்கப்படுவது ஏன்..? மர்மநபரை கண்டுபிடித்தாரா என்பது மீதிக்கதை.

போலீஸ் அதிகாரியாக ஜெயவந்த் முரட்டுத்தோற்றம் காட்டுகிறார்.. அடிக்கடி மீசையை முறுக்குகிறார்.. ஆனால் காட்டுப்பய என சொல்லும் விதமாக டைட்டிலுக்கு ஏற்றமாதிரி ஒரு போலீஸ் அதிகாரிக்கு உண்டான ஒரு அதிரடி காட்சி கூட வைக்கவில்லையே என்பது ஏமாற்றம் தருகிறது. நாயகி ஐரா அவ்வப்போது தலையை காட்டி க்ளைமாக்சில் டிவிஸ்ட் அடிக்கிறார்.. படம் முழுதும் ஜெயவந்த் கூடவே டிராவல் ஆகும் மூணாறு ரமேஷ் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். குணச்சித்திரம், வில்லத்தனம் மட்டுமே பண்ணிவந்த இயக்குனர் மாரிமுத்து இதில் காமெடியில் புதிய முகம் காட்டியுள்ளார்.

தொடர்ந்து வாகனங்களை எரிப்பது இன்றைய தேதியில் சாத்தியம் தானா..? ஹீரோவுக்கும் மர்மநபருக்குமான காட்சிகள் அடிக்கடி இடம்பெறாதது எல்லாமே சஸ்பென்ஸை ஓரளவு ஆரமபத்திலேயே உடைத்து விடுகின்றன. வடநாட்டு ஆட்கள் தமிழகத்தில் பைனான்ஸ் என்கிற பெயரில் இங்கே அடாவடி செய்கிறார்கள் என்பதை சொல்லவந்த இயக்குனர் யுரேகா, நிறைய விஷயங்களை ஓவர்டோஸாக சொல்ல நினைத்து சொதப்பியுள்ளார்.