கோலிசோடா – 2 ; விமர்சனம்

கோலிசோடா வெற்றி கொடுத்த எதிர்பார்ப்பை கோலிசோடா-2 நிறைவேற்றியதா.? பார்க்கலாம்.

ஆட்டோ ட்ரைவர், ஹோட்டல் சர்வர், ரவுடியின் அடியாள் என மூன்று பேர் தங்கள் வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர முற்படுகையில் அறிந்தோ அறியாமலோ சமூகத்தில் தங்களை சுற்றி புரையோடி கிடக்கும் விஷக்கிருமிகளால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தங்கள் அடையாளத்தை மீட்பதற்காக அவர்களை எதிர்த்து போராடும் இந்த மூவரும் வென்றார்களா..? வீழ்ந்தார்களா..? இதுதான் மொத்தப்படமும்.

சர்வராக வேலை பார்க்கும் இசக்கி பரத்-கிரிஷா குறூப் காதலும் அதை தொடர்ந்து நிகழ்வுகளும் காதலுக்கான சாதி எதிர்ப்பையும் ஆட்டோ ட்ரைவர் வினோத்திற்கு கவுன்சிலர் சரவணன் சுப்பையாவுக்குமான மோதல் கந்துவட்டி. அரசியல் அதிகார துஷ்பிரயோகத்தையும் பாரத் சீனிக்கும் ரவுடி செம்பான் வினோத்துக்குமான மோதல் ஒரு ரவுடி திருந்தி வாழ்வதில் உள்ள நடைமுறை சிக்கலையும் விலாவரியாக சொல்கிறது..

முதல் பாகத்தில் அநாதரவான நான்கு சிறுவர்கள் தங்களை வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அழிக்க நினைக்கும் ஒரே பொது எதிரியை குறிவைத்து தங்களது பலத்தை இறக்கினார்கள்.. அது நம்பும்படியாகவே இருந்தது. ஆனால் இதில் இளைஞர்கள் மூவருக்கும் தனித்தனி எதிரி என்பதும் அவர்களை தனித்தனியாகவும் பின்னர் கூட்டாகவும் அவ்வளவு ஆள் பலத்தை எதிர்கொள்ளும்போது நம்பகத்தன்மை ரொம்பவே குறைவாக இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் ரொம்பவே வழவழ.. ஒரு ஊரே திரண்டு வருகிறதாம் இந்த மூன்று பேரும் அவர்களை அடித்து வீழ்த்துகிறார்களாம்.நம்பும்படியாகவா இருக்கிறது.ஒரே பாட்டில் பணக்காரர்களாவது போல ஒரே பாட்டில் வீரம் வந்து நூறு பேரை அடிப்பது எல்லாம் காதுல பூ சமாச்சாரம்.

சம்பந்தப்பட்ட மூன்று புதுமுக ஹீரோக்களும் ஓரளவுக்கு நிறைவாகவே செய்துள்ளார்கள். ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ளாத இந்த மூன்று பேருக்கும் பொதுவான நபராக சமுத்திரக்கனி.. போராட திராணியற்று வாழ்க்கையில் தோல்வி அடைந்த ஓர் மனிதனை அச்சு அசலாக பிரதிபலித்துள்ளார். நாயகிகளில் கிரிஷா குறூப் ஓகே.. சுபிக்ஷா பிரமாதப்படுத்துகிறார். ரேகா, ரோகிணி ஆகியோரும் கதையுடன் அழகாக நகர்கிறார்கள்.

வில்லன்களில் மலையாள நடிகர் செம்பான் வினோத் ஜோஸ் தமிழுக்கு நல்லதொரு அறிமுகமாக கிடைத்திருக்கிறார்.. அலட்டல் இல்லாத நடிப்பு. சரவணன் சுப்பையாவின் வில்லத்தனமும் நன்றாகவே எடுபடுகிறது. கௌரவ போலீஸ் அதிகாரி வேடத்தில் கௌதம் மேனனும் கச்சிதம்.. கம்பீரம். அச்சுவின் பின்னணி இசை துடிக்க வைக்கிறது.

முதல் பாகத்தில் வெற்றி பெற்றவர்கள் இரண்டாம் பாகத்தில் அந்த வெற்றியில் பாதியை தொட்டாலே ஆச்சர்யம். விஜய் மில்டனும் பாதிக்கோட்டை மட்டுமே தொட்டுள்ளார்.