வெள்ளைக்காரர் காலத்தில் அபகரித்த வைரங்களை குலேபகாவலி கோவில் அருகில் தனது தாத்தா, பதுக்கி வைத்திருக்கும் தகவல் அவரது பேரன் மதுசூதன்ராவுக்கு தெரியவர, ஊரில் இருக்கும் தனது மச்சான் ஆனந்தராஜிடம் அதை தேடிக்கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார். சூழ்நிலையால் தங்களது பிழைப்புக்காக, தேவைகளுக்காக தங்களுக்கு தெரிந்தவகையில் திருட்டு, கொள்ளை, ஏமாற்று வேலைகள் செய்து பிழைப்பவர்கள் தான் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆகியோரிடம் புதையலை எடுத்துவரும் வேலையை பலவந்தமாக ஒப்படைக்கிறார் ஆனந்தராஜ்,
அவர்களை கண்காணிக்க கூடவே தனது ஆளான முனீஸ்காந்த்தையும் அனுப்பி வைக்கிறார். குலேபகாவலி கிராமத்தினரின் கண்களில் மண்ணை தூவி அந்த புதையல் இருந்த இடத்தை தோண்டும் அந்த நால்வருக்கும் அங்கே அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அப்படி என்ன அதிர்ச்சி, அதை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் என்ன என்பதும் இதில் மொட்ட ராஜேந்திரன் கோஷ்டியும் சிலைகளை திருடும் மன்சூர் அலிகான் கோஷ்டியும், போலீஸ் அதிகாரியான சத்யனும் இடையில் புகுந்து என்னவிதமான திருப்பங்களை உண்டுபண்ணுகிறார்கள் என்பதும் மீதிக்கதை.
ரசிகர்களை சிரிக்கவைக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக வைத்து மொத்தப்படத்தையும் ஜாலியாக நகர்த்தி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் ஏமாற்று வேளைகளில் எவ்வளவு ஸ்பெஷலிஸ்ட் என்பதற்கான காட்சிகள் செம கலாட்டா என்றாலும், நூதனமுறையில் ஆட்களை ஏமாற்றும் வித்தையில் முதலிடம் ரேவதிக்கே.. குறிப்பாக மொட்ட ராஜேந்திரனை அவர் சுற்றலில் விடுவது ஜாலி எபிசோட். கதையின் பிரதான கதாபாத்திரம் கூட அவர்தான். சுமார் 3௦ வருடங்களுக்கு முன் ‘அரங்கேற்ற வேளை’ படத்தில் அவர் நடித்திருந்த ‘துறுதுறு’ மாஷா கேரக்டரையே இதில் அவரது வயதான கேரக்டராக காட்டியிருப்பது நல்ல ஐடியா.
பிரபுதேவாவுக்கென தனி ஆவர்த்தனம் இல்லை என்றாலும், மற்றவர்களுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் அவருக்கான நகைச்சுவை பங்களிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. சத்யனை ஏமாற்றும் காட்சிகளில் அசால்ட் பண்ணுகிறார் ஹன்சிகா.
‘மாநகரம்’ படத்திற்கு பிறகு முனீஸ்காந்திற்கு படம் முழுதும் வருமாறு மீண்டும் ஒரு நல்ல கேரக்டர். அவரும் சரியாகவே செய்திருக்கிறார். நீண்டநாளைக்கு பிறகு மொட்ட ராஜேந்திரன் பார்முக்கு திரும்பி இருக்கிறார் என்றே சொல்லலாம். அம்மா சென்டிமென்ட்டை வைத்து அவர் அடிக்கும் கூத்துக்கள் காமெடிக்கு உத்தரவாதம் தருகின்றன.
போலீஸ் இன்ஸ்பெக்டரான சத்யன் ஒவ்வொருவரிடமும் ஏமாறும் காட்சிகள் சுவாரஸ்யம். அதிலும் அந்த ‘நல்ல நேரம்’ பட போஸ்டர் காமெடி விலா நோக சிரிக்க வைக்கிறது. யோகிபாபு வழக்கம் போல டைமிங் டயலாக் டெலிவரியில் பாஸ்மார்க்கை தாண்டுகிறார்.
என்ன ஒன்று, ஆனந்தராஜ் என்றாலே நகைச்சுவைக்கு கியாரண்டி என உறுதியாகிவிட்டதால், அவரது கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். அதேபோல சிலை கடத்தல் மன்னனாக வரும் மன்சூர் அலிகானும் கலகலப்பூட்ட தவறவில்லை. கிராமத்து தலைவராக வேல ராமமூர்த்தி, நிர்வாண பூஜை நடத்தும் பாவல் நவகீதன், வைரங்களை தேடும் மதுசூதன்ராவ் என மற்ற கதாபாத்திரங்களும் நிறைவு.
படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகளை பார்க்கும்போது த்ரில்லர் படம் போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டு, மீதி மொத்தப்படத்தையும் காமெடியாக நகர்த்தி சென்றிருப்பது கூட புதிய யுக்தி தான். அதிலும் அந்த விரங்களை மறைத்து வைக்க பயன்படுத்திய டெக்னிக் வியப்பை ஏற்படுத்த தவறவில்லை.
சிம்பிளான, வழக்கமான கதை என்றாலும் கூட அதை ஜாலியான ஒரு காமெடி படமாக கொடுத்து நான்ஸ்டாப் சிரிப்புக்கு கியாரண்டி கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கல்யாண்..