கண்டிப்பான போலீஸ் அதிகாரியான ஜெகபதி பாபுவின் தங்கை தமன்னா.. அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் விஷால், தாம் இருவரும் பூர்வ ஜென்மத்து காதலர்கள் என கதைவிட்டு, லோக்கல் தாத்தா சூரியின் உதவியுடன் போகப்போக அவர் மனதில் இடம் பிடிக்கிறார். விஷாலை அதிரடி சோதனைக்கு உள்ளாக்கும் ஜெகபதிபாபு அவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார்…
ஆனால் பின்னர்தான், ஜெகபதி பாபு ஊழல் போலீஸ் அதிகாரி என்றும் ஒரு கண்டெய்னர் நிறைய பணத்தை கடத்தி அடைத்து வைத்திருக்கிறார் என்பதும் அதை கண்டுபிடிக்கத்தான் விஷால் காதல் நாடகம் ஆடினார் என்பதும் தெரியவருகிறது. விஷால் இப்படி காதல் நாடகம் ஆடி பணத்தை கண்டுபிடிக்கக வேண்டிய பின்னணி என்பது மீதிக்கதை..
ஆக்சன் கால்வாசி, காமெடி முக்கால்வாசி என கலந்துகட்டி அடித்திருக்கிறார்கள்.. வில்லன்களை விஷால் அடிக்கும்போது நம் மீதே அடி விழுவது போன்ற பிரம்மை ஏற்படுகிறது.. அந்த அளவுக்கு சண்டைக்காட்சிகளில் அதிர வைத்திருக்கிறார் விஷால்.. கூடவே காமெடி ஏரியாவிலும் ஸ்கோர் பண்ணுகிறார். பூர்வ ஜென்மம் என தமன்னாவுடன் காதல் ட்ராக்கிலும் ரசிக்க வைக்கிறார்.
ஆக்சன் படங்களில் கதாநாயகிக்கு என்ன வேலையோ அதை இம்மி பிசகாமல் செய்துள்ளார் தமன்னா. காமெடி காட்சிகளை பொறுத்தவரை முன்பாதி முழுவதும் சூரி அதகளம் பண்ணினால், பின்பாதியில் ரீ என்ட்ரி ஆகியிருக்கும் வடிவேலு டாக்டர் பூத்ரியாக நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார் . விஷாலின் ஆகரில் அவருக்கு தெரியாமல் மறைந்து பாலோ பண்ணுவதும், அவர்களை பிச்சைகாரர்கள் பாலோ பண்ணுவதும் நிச்சயம் ரசிகர்களை வயிறு குலுங்க வைக்கும்.
வில்லன்களாக தருண் அரோரா, ஜெகபதிபாபு, போதாக்குறைக்கு ஜெயபிரகாஷ் என மூவரும் சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழாவின் இசை பெரிய அளவில் நம்மை கவரவில்லை. வடிவேலு-சூரி கூட்டணியின் காமெடி, விஷாலின் ஆக்சன், வலுவான பிளாஸ்பேக் என இரண்டரை மணி நேர படத்தையும் கலகலப்பாக கொண்டு செல்ல முயன்று இருக்கிறார் இயக்குனர். ஆனாலும் அவரது பழைய படங்களின் காமெடியையே மீண்டும் ரீமேக் செய்து இருப்பதால் இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் தள்ளாடவே செய்கிறது..
Rating: 3/5