பலே வெள்ளையத்தேவா – விமர்சனம்

போஸ்ட் மாஸ்டரான தனது அம்மாவுடன் வயலூர் கிராமத்துக்கு புதிதாக குடிவருகிறார் சசிகுமார். அரசு வேலைக்கு தேர்வெழுதி காத்திருக்கும் சூழலில், உள்ளூரில் கறிக்கடை நடத்தும் பாலாசிங்கின் மகள் தான்யாவுடன் காதல் ஏற்படுகிறது. காதலுக்கு உதவி செய்யும் விதமாக கோவை சரளா-சங்கிலி முருகன் தம்பதியின் அன்புக்கும் ஆளாகிறார் சசிகுமார்..

கூடவே கேபிள் டிவி நடத்தும் வளவனுடன் தகராறும் ஏற்படுகிறது. விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்வதால் அவரது கவர்மென்ட் வேலை கனவும தகர்கிறது. இந்நிலையில் மகளின் காதலுக்கு பாலாசிங்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். வளவனை சமாளித்து, காதலியை எப்படி கைபிடிக்கிறார் சசிகுமார் என்பதுதான் மீதிக்கதை.

இந்த முறை ஆக்சனை குறைத்து புல் அன்ட் புல் காமெடி ரூட்டுக்கு மாற முயற்சித்திருக்கிறார் சசிகுமார்.. ஆனால் அவருடைய நல்ல எண்ணத்துக்கு படத்தின் திரைக்கதை பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை என்பதுதான் சங்கடம்.. வலுவில்லாத காமெடி காட்சிகளால் தோரணம் கட்டியிருப்பதால் நமக்குத்தான் சிரிப்பு வருவேனா என்கிறது..

கதாநாயகியாக தன்யா.. மறைந்த நடிகர் ரவிச்சந்திரானின் பேத்தியாம். ரம்யா நம்பீசனையும் ஹரிப்ரியாவையும் மிக்ஸ் பண்ணினால் கிடைக்குமே அப்படி ஒரு உருவம்.. பெரிய அளவில் கவனம் ஈர்க்கும் விதமான அம்சங்கள் இல்லையென்றாலும் குறைசொல்லும்படியான ஆளும் அல்ல.

‘செல்பி காத்தாயி’யாக வரும் கோவை சரளாவின் சிணுங்கல்தனமான வசனங்கள் ஆரம்பத்தில் கலகலப்பூட்டினாலும் போகப்போக அதுவே ஓவர் டோஸ் ஆகி ‘போதுண்டா சாமி’ என்றாகிவிடுகிறது.. சங்கிலி முருகன் சிம்பிளாக நம்மை கவர்கிறார். பட்ஜெட் குறைவு காரணமோ இல்லை கதாசிரியரின் கற்பனைக்குறைவு காரணமோ தெரியவில்லை, காமெடி காட்சிகளும் சரி.. காமெடியன் என்கிற பெயரில் சசிகுமாரின் நண்பனாக வருபவரும் சரி சசிகுமாருக்கு உதவ மறுத்திருக்கிறார்கள்..

சசிகுமாரின் அம்மா ரோகிணி… வழக்கமான குறை சொல்லமுடியாத அம்மா. கேபிள் டிவி கனெக்சன் கொடுக்கவில்லை என்றால் ஆள்வைத்து அடிக்கும் மலிவான வில்லனாக வளவன், போலீஸ் ஊருக்குள் வரும்போதெல்லாம் ஜெர்க் ஆகி அருவாளை தூக்கும் பாலாசிங் என ஒவ்வொருவரும் சாதரணமாக கடந்துபோகிறார்கள். தர்புகா சிவா, இன்னும் கிடாரி படத்தின் இசையில் இருந்து வெளிவரவில்லை என்பதை ஆரம்பத்திலேயே உணர்த்திவிடுகிறார்.

சீட்டுக்காசை எடுத்துக்கொண்டு ஓடும் கதாநாயகியின் குடும்ப பின்னணி இப்போ சமீபத்தில் தானே ஒரு படத்தில் வந்தது.. அதை கவனித்து கொஞ்சம் சரி செய்திருக்கலாமே இயக்குனர் சோலை பிரகாஷ் சார்..? லோன் கட்டாமல் ஏமாற்றிவிட்டார் என தனது புகைப்படத்தை பிளக்ஸ் அடித்து ஒட்டிவிடுவார்களோ என பதறுகிறார் கதாநாயகி.. ஆனால் அவரது குடும்ப பின்னணியை பற்றி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பேசுகிறார்.. என்ன லாஜிக்கோ..?

குறைகள் மட்டுமே இல்லாமல் படத்தில் ஆங்காங்கே சில நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.. ஆனால் அவை சசிகுமார படங்களை ரசிப்பவர்களின் யானைப்பசிக்கு சோளப்பொறியாகத்தான் இருக்கிறது.

Rating:2/5